×

ஒரு வாரமாக சர்வர் பழுது இ-சேவை மையத்தை பொதுமக்கள் முற்றுகை: மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

வேளச்சேரி: அடையாறு இ-சேவை மையத்தில் சர்வர் பழுது எனக்கூறி ஒரு வாரமாக ஊழியர்கள் திருப்பி அனுப்பியதை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி 13வது மண்டல அலுவலகம் அடையாறில் அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் வருமான சான்றிதழ், பிறப்பு, இறப்பு பதிவு சான்று, சாதி சான்றிதழ் உட்பட பல சான்றிதழ்கள் பெற தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த அலுவலகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சர்வர் பழுது எனக் கூறி, தினசரி சான்றிதழ் பெற வரும் மக்களை அங்குள்ள ஊழியர்கள் திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது. இதனால், பலர் சான்றிதழ் பெற முடியமல் தவித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை 50க்கும் மேற்பட்டோர் சான்றிதழ்கள் பெற இ-சேவை மையம் முன்பு வரிசையில் காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த ஊழியர்கள், சர்வர் பிரச்னை சரிசெய்யப்படவில்லை. எனவே, சான்றிதழ் வழங்க முடியாது, என கூறியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் இ-சேவை மையத்தை முற்றுகையிட்டு, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவலறிந்து அடையாறு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அங்கிருந்த பொதுமக்களை சமாதானப்படுத்தி, அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் சர்வர் சரியாகி விடும். நாளை முதல் சான்றிதழ்கள் வழங்கப்படும், என உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Siege , Server repair, e-service center, public siege, stir
× RELATED லட்சக்கணக்கில் விவசாயிகள் முற்றுகை...