×

மசூத் அசார் விவகாரத்தில் முட்டுக்கட்டை சீன அதிபர் ஜின்பிங்கை பார்த்து பயப்படுகிறார் பிரதமர் மோடி: ராகுல் கிண்டல்

புதுடெல்லி: மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கும் ஐநா தீர்மானத்திற்கு சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கை பார்த்து பிரதமர் மோடி பயப்படுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார். காஷ்மீரின் புல்வாமா நகரில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியான தற்கொலை படை தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு. இதன் தலைவர் மசூத் அசார், மும்பை தாக்குதலுக்கு மூளையாக இருந்தவன். இந்தியாவில் பல்வேறு நாசவேலைகளை செய்து வரும் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐநாவில் இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இதற்கிடையே புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மசூத் அசாருக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வந்தன.  இந்த தீர்மானம் நிறைவேற இருந்த கடைசி நேரத்தில் சீனா மீண்டும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முட்டுக்கட்டை போட்டுவிட்டது. இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘‘பலவீனமான மோடி , ஜின்பிங்கை பார்த்து பயப்படுகிறார். இந்தியாவுக்கு எதிராக சீனா நடந்து கொண்டபோதும், மோடி வாய் திறந்து ஒருவார்த்தை கூட பேசவில்லை. நமோவின் சீன உறவு என்பது, குஜராத்தில் ஜின்பிங்குடன் ஊஞ்சலாடுவது, டெல்லியில் கட்டிப்பிடிப்பது, சீனாவில் தலைவணங்குவது என்ற வகையில்தான் இருக்கிறது’’ என கிண்டலடித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டரில், ‘‘மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க முயலும் இந்தியாவின் முயற்சியை சீனா ஒவ்வொரு முறையும் முட்டுக்கட்டை போடும்போது, ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் எழும் கேள்வியானது... பிரதமர் மோடி, அதிபர் ஜின்பிங்குடன் ஊஞ்சலாடியதில் என்ன பிரயோஜனம் இருக்கிறது? என்பதுதான்’’ என பதிவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nehru ,Jyoti Basu ,Jinping Chinese ,Rahul Kindi , Masood Azhar , Chinese President Jinping,Modi, Rahul
× RELATED நகராட்சி மற்றும் மாநகராட்சிகளின்...