×

அணைகளில் நீர் இருப்பை கவனத்தில் கொண்டு மக்களுக்கு தேர்தல் வரை குடிநீர் விநியோகிக்க முடியுமா?: பொதுப்பணித்துறை குடிநீர் வாரியத்திற்கு அவசர கடிதம்

சென்னை: அணைகளில் நீர் இருப்பை கவனத்தில் கொண்டு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று தமிழக பொதுப்பணித்துறை தமிழ்நாடு குடிநீர் வாரியத்திற்கு அறிவுரை வழங்கியுள்ளது. இந்த நிலையில்,  நாடாளுமன்ற தேர்தல் வரையாவது சமாளிக்க முடியுமா? என்ற அச்சத்தில் அதிகாரிகள் உள்ளனர். தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 89 அணைகள் உள்ளது. இதில், மேட்டூர், வைகை, முல்லை பெரியாறு, பாபநாசம், பவானிசாகர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, மணிமுத்தாறு, கிருஷ்ணகிரி, சாத்தனூர், சோலையாறு,  பரம்பிகுளம், ஆழியாறு, திருமூர்த்தி உட்பட 15 முக்கிய அணைகள் உள்ளது. 198 டிஎம்சி கொள்ளளவு கெண்ட இந்த அணைகள் தான் குடிநீர் மற்றும் பாசன தேவைகளை பூர்த்தி செய்கிறது.இந்த நிலையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் குறைவாகவே மழை பதிவானது. இதனால், அணைகள், ஏரிகளில் நீர் வரத்து எதிர்பார்த்த அளவு இல்லை. இதனால், 198 டிஎம்சி கொள்ளளவு  கொண்ட இந்த அணைகளில் தற்போது வெறும் 58 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்நிலையில், ஆழியாறு, சோலையாறு, கிருஷ்ணகிரி, பேச்சிபாறை, பெருஞ்சாணி, அமராவதி, பாபநாசம் உள்ளிட்ட அணைகள் வறண்டு  வருகிறது.

அதே நேரத்தில், மேட்டூர் அணையில் 29 டிஎம்சியும், பவானி சாகர் அணையில் 13 டிஎம்சியும், மணிமுத்தாறில் 2.4 டிஎம்சியும், திருமூர்த்தியில் 1.1 டிஎம்சியும், ைவகையில் 1.4 டிஎம்சியும், பெரியாறில் 1.5 டிஎம்சியும் மட்டுமே  உள்ளது.இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் தான் தொடங்கும். அதுவரை, அணைகளில் உள்ள நீர் இருப்பை வைத்து தான் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.இந்நிலையில், தமிழக பொதுப்பணித்துறை சார்பில் தமிழ்நாடு குடிநீர் வாரியத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில் அணைகளில் நீர் இருப்பு குறைவாக உள்ளது. எனவே, அதை கவனத்தில் கொண்டு  குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். இல்லையெனில் ஏப்ரல், மே மாதத்திற்கு முன்னரே குடிநீர் பிரச்னை ஏற்பட்டு விடும். அணைகள், ஏரிகளை மட்டும் நம்பி இருக்காமல் குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று  அந்த கடிதத்தில் கூறியுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதுவரையாவது குடிநீர் தேவையை சமாளிக்க முடியுமா என்ற அச்சத்தில் தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Water Distribute Water to Dams ,Elections , dams,polls, Emergency Letter,
× RELATED மக்களவை தேர்தலையொட்டி சிறப்பு...