×

மதுரை சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது : தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

மதுரை : மதுரை சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று  தேர்தல் தேதியை மாற்ற கோரும் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. முன்னதாக மதுரையில் மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியை ஏன் மாற்றக்கூடாது? என்று தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. மதுரையில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை சித்திரை திருவிழா

உலகப் புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. திருவிழாவின் உச்சகட்டமாக மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்துக்கு மறுநாள் ஏப்ரல் 18ம் தேதி மாசி வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. இந்த உற்சவம் அன்று அதிகாலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து விடிய விடிய நடைபெற்று ஏப்ரல் 19ல் காலை அழகர் வைகை ஆற்றில் இறங்கும் உற்சவம் நடைபெறும்.அழகர் எதிர்சேவை மற்றும் ஆற்றில் இறங்குவதை தரிசிக்க தென் மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் விரதம் இருந்து வருவார்கள். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையில் கூடுவார்கள். பாதுகாப்புக்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்படுவார்கள்.

மக்கள் வாக்களிப்பதில் சிக்கல் என குற்றச்சாட்டு

இதே நாளில் தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது, தென்மாவட்ட பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது. திருவிழா தேதியை மாற்ற முடியாது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் பிரச்னை எழக்கூடும் என்பதால், தேர்தல் ஆணையம் மறு ஆய்வு நடத்தி, தேர்தல் தேதியை மாற்றியமைக்க வேண்டும். அதே நாளில் தேர்தல் நடத்தினால் மக்கள் வாக்களிப்பதில் கடும் சிக்கல் எற்படும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு

இதனிடையே மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தலை ஒத்திவைக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் பார்த்தசாரதி மனு தாக்கல் செய்தார். தேர்தல் நடக்கும் ஏப்.18ம் தேதி மீனாட்சி அம்மன் கோயில் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டம் நடப்பதால் மதுரை தொகுதி தேர்தலை ஒத்திவைக்க வைக்க வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன் -சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது  மதுரையில் மக்களவை தேர்தல் நடைபெறும் தேதியை ஏன் மாற்றக்கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் மதுரை சித்திரைத் தேர்த் திருவிழா நாளில் தேர்தல் நடத்துவது ஏன் ? 5 லட்சம் பேர் பங்கேற்கும் மதுரை சித்திரைத் திருவிழாவை கருத்தில் கொள்ளாதது ஏன்? 100% வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் ஆணையம் ஆர்வம் காட்டவில்லையா? மதுரை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களிலும் வாக்குப்பதிவு குறையாதா? என்று தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. இதையடுத்து சித்திரை திருவிழா நடைபெறுவதால் தேர்தலை தள்ளிவைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.

தேர்தல் ஆணையம் பதில்

இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின் போது, மதுரை சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. மேலும் மதுரையில் மட்டும் தேர்தலை ஒத்திவைத்தால் பிற இடங்களில் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் வாக்களிக்க கூடுதலாக 2 மணி நேரம் ஒதுக்க தயார் என்றும் தேர்தல் ஆணையம் தமது பதிலை அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது.

ஆனால் தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், விழாவை கருத்தில் கொள்ளாமல் காலை 6 மணி முதல் தேர்தலை நடத்த திட்டமிட்டது எப்படி என்றும் மதுரையில் தேர்தல் தேதியை மாற்ற முடியவில்லை எனில் தமிழகம் முழுவதும் தேர்தலை ஒத்திவைக்கலாமே என்றும்  கேள்வி எழுப்பினர். மேலும் வாக்காளர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்றும் கடமைக்காக தேர்தலை நடத்த நினைத்தால் நடத்துங்கள் என்றும் கூறிய நீதிபதிகள், பல லட்சம் பேர் பங்கேற்கும் சித்திரை விழாவுடன் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றது என்று தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து திருவிழா நடைபெறும் இடத்தில 59 வாக்குச் மையங்கள் உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், தேர்தல் வாக்குப்பதிவு பாதிக்கப்படுவதுடன் திருவிழாவும் பாதிக்கப்படும் என்று விளக்கம் அளித்தனர். எனவே முறையான அறிக்கையை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் தேர்தல் ஆணையர் நேரில் ஆஜராக நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Madurai Festival , Election Commission, Madurai, Chithra Festival, Manu
× RELATED மதுரை சித்திரை திருவிழாவுகாக 11-ம் தேதி...