×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஜெத்தேசால் வனப்பகுதியில் காட்டுத்தீ: அரியவகை மரங்கள் சேதம்

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஜெத்தேசால் வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 50 ஏக்கர் பரப்பளவில் தீ பற்றி எரிவதால் அரியவகை மரங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நேற்று பற்றிய இந்த காட்டுத்தீ இன்று காலை முதல் அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. மேலும் காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவி 1000க்கும் மேற்பட்ட யூகலிப்டஸ் மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், எரிந்த மரங்கள் சாலையில் சரிந்து கிடப்பதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து ஜெத்தேசால் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் அனைத்து பேருந்துகள் மற்றும் வாகனங்களும் சத்தியமங்கலம் வனசோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ காரணமாக அப்பகுதி வழியாக எந்த வாகனமும் அனுமதிக்கப்படவில்லை.

சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ பரவி வருவதால், தீயை அணைக்கும் பணியில் மக்களின் உதவியுடன் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, அதிக வெப்பம் காரணமாகவும், காற்றின் வேகம் காரணமாகவும் காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த தீயை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக உள்ளது என தெரிவித்துள்ளனர். இந்த காட்டுத்தீயானால் வனவிலங்குகளுக்கு இதுவரை எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் ஏதேனும் இழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்த பிறகு தான் தெரியவரும். காட்டுத்தீயினால் புகை மூட்டம் அதிகமாக இருப்பதால் தீயை முழுவதுமாக அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sathiyamangalam Tigers ,forest , Sathiyamangalam, Tigers Archive, Wildfire
× RELATED பழநி வனப்பகுதி எல்லைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு