×

காவிரியில் மக்களவை தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பம் : நாகர்கோவில் கலைஞர் வடிவமைப்பு

திருச்சி: வரும் மக்களவை தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி திருச்சி காவிரி ஆற்றில் நாகர்கோவிலை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் இந்திய பாராளுமன்ற கட்டிடம், தேர்தல் நாள், மணல் சிற்பத்தை வடிவமைத்து  அசத்தினார். நாகர்கோவிலை சேர்ந்தவர் சசிவர்மா. மூலிகை வைத்தியசாலை  நடத்தி வரும் இவர் வர்ம சிகிச்சை அளித்து வருகிறார். இவர் மணல் சிற்ப கலைஞருமாவார். கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு விழிப்புணர்வு  மணல் சிற்பங்களை வடிமைத்துள்ளார். சென்னை மெரினா பீச், தூத்துக்குடி என  பல்வேறு ஊர்களில் இவர் மணல் சிற்பம் வடிவமைத்துள்ளார்.

திருச்சி மாவட்ட  தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சி தலைவருமான சிவராசு திருச்சி மாவட்ட வாக்காளர்கள் 100 சதவீதம்  வாக்களிக்க வழி செய்யும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து  அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருச்சி துணை கலெக்டர்  சிபி.ஆதித்தியா செந்தில்குமார் இதுதொடர்பாக கூகுளில் தேடியபோது,  மணல் சிற்ப வடிவமைப்பாளர் சசிவர்மாவின் மணல் சிற்பங்கள் தென்பட்டது. இதையடுத்து,  அவரை தொடர்பு கொண்டு மக்களவை தேர்தலையொட்டி திருச்சி காவிரி  ஆற்றில் விழிப்புணர்வு மணல் சிற்பம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதன்பேரில் சசிவர்மா திருச்சி வந்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையம் அருகே காவிரி ஆற்றில் மணல் சிற்பம் வடிவமைக்கத் துவங்கினார். நேற்று அதிகாலை 2 மணிக்கு துவங்கி காலை 8 மணிக்கு மணல் சிற்பம்  வடிவமைத்து முடித்தார். பாராளுமன்றம், மக்களவை தேர்தல் நடைபெறும் நாள், வாக்களித்த பின் அடையாள மை தடவிய கை விரல்  மற்றும் 100 சதவீதம் வாக்களியுங்கள் என்ற வாசகம் அடங்கிய அழகிய மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். திருச்சி கலெக்டர் சிவராசு, ஸ்ரீரங்கம்  ஆர்டிஓவும், துணை கலெக்டருமான சிபி.ஆதித்தியா செந்தில்குமார் ஆகியோர் நேரில் மணல் சிற்பத்தை பார்த்து பாராட்டினர். திருச்சி ஸ்ரீரங்கம் காவிரி பாலத்திலிருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு மணல்  சிற்பத்தை ஆவலுடன் பார்த்து ரசித்தனர்.

இரவில் ஏன்?


இதுகுறித்து  மணல் சிற்ப கலைஞர் சசிவர்மா கூறுகையில், ‘பகல் நேரங்களில் வெயில் அதிகமாக இருக்கும்.  நள்ளிரவுக்கு மேல் தான் வெயிலின் தாக்கம் குறைந்து, ஆற்றில் குளுமை  ஏற்பட்டு, மணலும் நன்றாக இருக்கும். யாருடைய தொந்தரவும்  இருக்காது. எனவே தான் மணல் சிற்பங்களை இரவு நேரத்தில்  வடிவமைக்கிறேன்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lok Sabha ,Kaveri ,Nagarcoil , Cauvery, election awareness, sand sculpture
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...