×

ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் பயங்கர தீ : ஏராளமான மரங்கள் எரிந்து நாசம்

ஓசூர்: ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் தீப்பிடித்து எரிந்ததில் ஏராளமான மரங்கள், செடி கொடிகள் எரிந்து நாசமானது. ஓசூர் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையையொட்டியுள்ள பேரண்டப்பள்ளியில் வனப்பகுதி பரந்து விரிந்து காணப்படுகிறது. பேரண்டப்பள்ளி காட்டில் யானைகள், மான்கள், குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. இதைத் தவிர மூலிகை செடிகள், அரியவகை மரங்களும் காணப்படுகின்றன. கோடைக்கு முன்பே கடும் வறட்சி நிலவி வருவதால் காட்டில் உள்ள அனைத்து மரம், செடி கொடிகளும் காய்ந்து கருகிய நிலையில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் பேரண்டப்பள்ளி வனத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ வேகமாக பரவி, மரங்கள், செடிகள் கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனைக்கண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் திடுக்கிட்டனர்.

இதுகுறித்து ஓசூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், வீரர்கள் விரைந்து சென்று சாலையோரம் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை, தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தினர். ஆனால், வனப்பகுதிக்குள் தீயணைப்பு வண்டிகள் செல்ல முடியாததால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ஒரு சில வீரர்கள் துணிச்சலாக வனப்பகுதிக்குள் சென்று அங்கிருந்த பச்சை இலை தழைகள் மூலம், சுமார் 5 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும், காய்ந்து கிடந்த ஏராளமான மரம், செடி கொடிகள் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் பயணம் செய்வோர் புகைபிடித்து விட்டு அணைக்காமல் வீசி செல்லும் சிகரெட் மற்றும் பீடி துண்டுகள் பறந்து அருகில் உள்ள காட்டில் விழுவதால் தீப்பற்றிக்கொள்கிறது. தேசிய நெடுஞ்சாலையோரம் பற்றிய தீயை, தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு கட்டுப்படுத்தியுள்ளனர். இல்லையெனில், அடர்ந்த வனப்பகுதிக்குள் தீ பரவி இருக்க கூடும். அப்படி பரவி இருந்தால், அங்கு வசித்து வரக்கூடிய விலங்கினங்கள் உயிரிழந்திருக்கும். தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், காடுகளுக்கு தீங்கு இழைக்காத வகையில் தங்களது பயணத்தை மேற்கொள்ள வேண்டும்,’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : forest area ,Hosur , Hosur, perantappalli, trees
× RELATED ஓசூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு