×

19ம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி

டெல்லி : ரியல் எஸ்டேட் துறைக்கான வரி குறைப்பை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக வரும் 19ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் ஜிஎஸ்டி என்ற ஒரே சீரான வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. அந்த வரி அமலாக்கத்துறையை நெறிப்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது.

மத்திய நிதி அமைச்சர் மற்றும் மாநில நிதி அமைச்சர்களை உறுப்பினர்களாக கொண்ட இந்த கவுன்சில் அவ்வப்போது ஜிஎஸ்டி குறித்து விவாதித்து பலவேறு முடிவுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த கவுன்சிலின் 34வது கூட்டத்தை வரும் 19ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது. அதில் ரியல் எஸ்டேட் துறைக்கான வரியை குறைப்பது தொடர்பாக கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து முடிவு செய்ய திட்டமிடபப்ட்டு இருந்தது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 10ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.இதனால் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு தலைமை தேர்தல் ஆணையரின் அனுமதி பெற வேண்டி இருந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தை பரிசீலித்த தேர்தல் ஆணையம், இந்த கூட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதன்படி வரும் 19ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொளி காட்சி மூலம் நடக்கிறது. கடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் மீதான வரிகள் குறைக்கப்பட்டு 5% வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த புதிய வரி விதிப்பும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election Commission ,council meeting ,GST , Real estate, features, GST council, enforcement, election commission, approval
× RELATED அண்ணாமலை வேட்புமனு ஏற்பை எதிர்த்து அதிமுக புகார்!