×

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க 4வது முறையாக சீனா முட்டுக்கட்டை

ஜெனீவா : புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க 4வது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது.

வீட்டோ அதிகாரம் மூலம் 3 முறை சீனா முட்டுக்கட்டை


பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பை ஐநா சபை ஏற்கனவே சர்வதேச தீவிரவாத அமைப்பாக அறிவித்து தடை விதித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவரான மசூத் அசார் (50), இந்தியாவில் நடக்கும் பல்வேறு நாச வேலைகளுக்கு மூளையாக இருப்பவர். இவரையும் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி 3 முறை முட்டுக்கட்டு போட்டுள்ளது.

புல்வாமாவில் தற்கொலைப்படை தாக்குதல்

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன.  

மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க கோரி தீர்மானம்

இதற்கிடையே, புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியாவின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புதிய தீர்மானத்தை கடந்த மாதம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காலக்கெடு இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்தது.

 சீனா 4வது முறையாக முட்டுக்கட்டை

இந்நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பல நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கத் தயாராக இருந்த போதிலும், சீனா மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் தனது வீட்டோ அதிகாரம் மூலம் இந்தியாவின் நடவடிக்கைக்கு 4வது முறையாக சீனா முட்டுக்கட்டைப் போட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : China ,terrorists , China, UN Security, Council, Pulwama attack, Masood Asar
× RELATED சொல்லிட்டாங்க…