×

சென்னை கல்லூரி, நாகர்கோவில் நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி பங்கேற்றது விதி மீறல் ஆகாது: தமிழக தேர்தல் ஆணையர் தகவல்

சென்னை: சென்னை கல்லூரி மற்றும் நாகர்கோவில் நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டது தேர்தல் நடத்தை விதி மீறல் ஆகாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நேற்று தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழகம் வந்தார். நேற்று காலை சென்னை வந்த அவர் ஸ்டெல்லா மேரீஸ் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாணவிகளுடன் கலந்துரையாடினார். அதை தொடர்ந்து, நாகர்கோவிலில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார். அப்போது, 2019 தேர்தல் தமிழகத்திற்கு உரிமைக்கான தேர்தலாக இருக்கும். இப்போது தமிழகத்தை ஆள்பவர்களை மத்தியில் உள்ள மோடி தலைமையிலான அரசு  பின்புறமாக இருந்து இயக்குவதை பார்க்கிறோம். தமிழகத்தின் உணர்வுகளால் பின்னப்பட்ட ஆட்சி மத்தியில் இருந்தது உண்டு. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் இறையாண்மையை நிர்மூலமாக்கிக்கொண்டு இருக்கிறார். மத்தியில் இருந்துகொண்டு தமிழகம் மட்டுமல்ல ஒவ்வொரு மாநிலங்களையும் அடக்கி ஆள அவர் முயற்சி செய்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை தமிழக மக்கள் அங்கீகரிக்கமாட்டார்கள் என்றார்.

இந்நிலையில், கல்லூரி நிகழ்ச்சி மற்றும் நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றது, தேர்தல் நடத்தை விதி முறைகள் மீறிய செயல் என அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சென்னை மற்றும் நாகர்கோவிலில் கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது, தேர்தல் நடத்தை விதி முறைகள் மீறிய செயலா? என்று ஆய்வு செய்யப்பட்டது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தும்போது தேர்தல் ஆணையம் விதித்துள்ள 5 கட்டுப்பாடுகளை கணக்கில் கொள்ள வேண்டும். அதன் அடிப்படையில், ராகுல் கலந்து கொண்டதில் தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை. முன் அனுமதி பெற்று நடத்துவதில் எந்த தவறும் இல்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

தேர்தல் அதிகாரி டெல்லி பயணம்:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று இரவு அவசரமாக டெல்லி சென்றார். இதுகுறித்து, தேர்தல் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இன்று டெல்லியில் இந்திய தலைமை தேர்தல்  ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மதுரையில் தேர்தல் நடைபெறும் நாள் அன்று சித்திரை திருவிழா நடப்பதால் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றியும், வழக்கு இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 3 சட்டமன்ற இடைத்தேர்தல்  குறித்தும், போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் அளித்துள்ள புகார் மனுக்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும்” என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul Gandhi ,events ,Nagercoil ,Chennai ,Tamil Nadu , Chennai College, Nagercoil, Rahul Gandhi, Election Commissioner of Tamil Nadu
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...