×

தொடரை வென்றது ஆஸ்திரேலியா

புதுடெல்லி: இந்திய அணியுடன் நடந்த 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 35 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன் குவித்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 100 ரன் (106 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். கேப்டன் பிஞ்ச் 27, ஹேண்ட்ஸ்கோம்ப் 52, ஸ்டாய்னிஸ், டர்னர் தலா 20, ரிச்சர்ட்சன் 29, கம்மின்ஸ் 15 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் புவனேஷ்வர் 3, ஷமி, ஜடேஜா தலா 2, குல்தீப் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 273 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தவான் 12, கேப்டன் கோஹ்லி 20, ரிஷப் பன்ட், விஜய் ஷங்கர் தலா 16 ரன் எடுத்து வெளியேற, ரோகித் ஷர்மா 56 ரன் (89 பந்து, 4 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தார். ஜடேஜா டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, இந்தியா 28.5 ஓவரில் 132 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது.

இந்த நிலையில், கேதார் ஜாதவ் - புவனேஷ்வர் ஜோடி உறுதியுடன் போராடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் 7வது விக்கெட்டுக்கு 91 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். புவனேஷ்வர் 46 ரன் (54 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), கேதார் 44 ரன் எடுத்து (57 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க, இந்திய போராட்டம் முடிவுக்கு வந்தது. ஷமி 3, குல்தீப் 9 ரன்னில் வெளியேற, இந்தியா 50 ஓவரில் 237 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பூம்ரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. பந்துவீச்சில் ஸம்பா 3, கம்மின்ஸ், ரிச்சர்ட்சன், ஸ்டாய்னிஸ் தலா 2, லயன் 1 விக்கெட் வீழ்த்தினர். 35 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஐசிசி உலக கோப்பை தொடருக்கு முன்பாக அடைந்த இந்த தோல்வி, இந்திய அணிக்கு எச்சரிக்கை மணியாக ஒலித்துள்ளது.

ரோகித் 8,000
இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் ஷர்மா, ஒருநாள் போட்டிகளில் 8,000 ரன் மைல்கல்லை எட்டினார். டெல்லியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நேற்று நடந்த 5வது ஒருநாள் போட்டியில் 46 ரன் எடுத்தபோது அவர் இந்த சாதனையை நிகழ்த்தி (200வது இன்னிங்ஸ்) கங்குலியுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டார். கேப்டன் விராத் கோஹ்லி (175), டி வில்லியர்ஸ் (182) முதல் 2 இடங்களில் உள்ளனர். ராஸ் டெய்லர் (203), சச்சின் (210), பிரையன் லாரா (211) 4வது, 5வது, 6வது இடங்களை பிடித்துள்ளனர்.

கவாஜா அசத்தல்
ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா நடப்பு ஒருநாள் போட்டித் தொடரில் மொத்தம் 383 ரன் (அதிகம் 104, சராசரி 76.60, சதம் 2, அரை சதம் 2) குவித்து அசத்தினார். 5 போட்டியிலும் அவரது ரன் குவிப்பு விவரம்: 50, 38, 104, 91, 100.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Australia , Australia, won,
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...