×

டிஜிபி நியமனத்தில் அதிகாரம் கிடையாது தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: டிஜிபிக்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு கிடையாது;  6  மாதங்களில் ஓய்வு பெற இருக்கும் ஒரு அதிகாரியை டிஜிபியாக நியமிக்க  பரிந்துரை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு  வழங்கியுள்ளது.காவல்துறை மறுசீரமைப்பு தொடர்பாக முன்னாள் டிஜிபிக்கள் பிரகாஷ்சிங்,  என்.கே.சிங் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அது  தொடர்பாக ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில்,”மாநில காவல்துறை  தலைவர் பதவியில்  அதாவது டிஜிபியாக நியமிக்கப்படும் அதிகாரியை இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து பணி  செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும் மாவட்ட எஸ்பியும் அதேபோல் இரண்டு  ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிய  வேண்டும். இவர்கள் நியமனம் தகுதியின்  அடிப்படையில் இருக்க வேண்டும். மேலும் விசாரணை அமைப்பு மற்றும் சட்டம்  ஒழுங்கை கண்காணிக்கும் பொறுப்பு என்று அவர்களின் வேலை அனைத்தும்  தனித்தனியாக இருக்க  வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.இதையடுத்து மேற்கண்ட உத்தரவுகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் இருந்து  வருவதால் அது தொடர்பாக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா நீதிமன்ற  அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த  மனுவை விசாரித்த  நீதிமன்ற உத்தரவில்,” எந்த மாநிலமும் அல்லது யூனியன் பிரதேசமும் பொறுப்பு  டிஜிபி என்று ஒருவரை தனிப்பட்ட முறையில் நியமிக்கக் கூடாது. முழு அதிகாரம்  பொருந்திய அதிகாரியை மட்டும் தான்  நியமிக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள  மூன்று மூத்த போலீஸ் அதிகாரிகள் பெயரை மத்திய பணியாளர் நல வாரியத்திற்கு  அனுப்பி வைக்க வேண்டும். அவர்கள் ஒப்புதல் அளித்தபின் பட்டியில் இருந்து  ஒருவரை  டி.ஜி.பியாக நியமிக்க வேண்டும். அப்படி ஒரு நபர் நியமனம்  செய்யப்படும் பட்சத்தில் அவர் கண்டிப்பாக 2 ஆண்டு டிஜிபியாக தொடர்ந்து  பணிபுரிய வேண்டும். இதைத்தவிர டி.ஜி.பி-க்கள் ஓய்வு பெறுவதற்கு 3  மாதங்களுக்கு  முன்னதாக புதியதாக நியமிக்கப்படுபவர்களின் பரிந்துரை பெயர்  பட்டியலை மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு மாநில அரசு அனுப்பி வைக்க  வேண்டும்.

 இதையடுத்து மத்திய பணியாளர் தேர்வு ஆணையம், தேர்வு  செய்யும் அதிகாரிகளின் பெயர்கள் அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன்  பிரதேசங்களின் அரசுக்கு அனுப்பப்பட்டு அவர்களில் ஒருவரை டிஜிபியாக நியமனம்  செய்ய வேண்டும். குறிப்பாக  ஓய்வு பெறும் வயதில் உள்ளவர்களை டி.ஜி.பியாக  நியமிக்க கூடாது. ஏனெனில் சீனியாரிட்டியில் அடுத்த இடத்தில் இருக்கும் மற்ற  அதிகாரிகள் பாதிப்படைவார்கள் என குறிப்பிடப்பட்டது.  டிஜிபி  நியமனம் தொடர்பான வழக்கின் உத்தரவில் ஒருசில விதிமுறைகளை தளர்த்தக்கோரி  தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுவை  தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில்  மேற்கண்ட மனுக்களை பல கட்டங்களாக  விசாரித்த நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பை ஒத்திவைத்தது.
  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக்குப்தா மற்றும் சஞ்சய் கண்ணா  ஆகியோர் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில்,” 6 மாதத்தில் ஓய்வு  பெற இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரியை டிஜிபியாக  நியமிக்க பரிந்துரை   செய்யலாம். இதையடுத்து அவர் 2 ஆண்டுகள் அப்பதவியில் இருப்பார். இதனால்  இவரின் ஓய்வுக்காலம் என்பது தாமாகவே ஒன்றரை ஆண்டுகள் நீட்டிக்கப்படுகிறது.  டிஜிபிக்களை நியமிக்கும் முழு  அதிகாரம் யுபிஎஸ்சிக்கு மட்டுமே உள்ளது.  மாநில அரசு இதில் தலையிட முடியாது. இந்த உத்தரவு அனைத்து மாநிலங்களுக்கும்  பொருந்தும்.

இதைத்தவிர புதிய டிடிபிக்களை தேர்வு செய்யும்போது அதன்  பரிந்துரைய 3 மாதத்திற்கு முன்னதாகவே யுபிஎஸ்சி நிர்வாகத்திற்கு மாநில அரசு  அனுப்பி வைக்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவில் எந்த மாற்றமும்  கிடையாது  என நேற்று தீர்பளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு கோரிக்கை  நிராகரிப்பு: இதில் புதிய டிஜிபிக்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில  அரசுக்கு வழங்க வேண்டும் என்றும், அதேப்போல் அதுகுறித்த பெயர் பட்டியலை  யுபிஎஸ்சிக்கு மூன்று மாத காலத்திற்கு  முன்னதாகவே வழங்க வேண்டும் என்பதில்  எங்களுக்கு கூடுதல் அவகாசம் வேண்டும் என தமிழக அரசு மேற்கண்ட வழக்கு  விவகாரத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. ஆனால் நேற்று  வழங்கப்பட  தீர்ப்பின் போது தமிழக அரசின் கோரிக்கை எதுவும்  பரிசீலிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state government ,Supreme Court , power ,DGP , Government , Tamil Nadu, Supreme Court verdict
× RELATED ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு; 24,000...