×

ஐநாவின் அறிவிப்பு வெளியாகிறது மசூத் அசார் சர்வதேச தீவிரவாதி? அதிகாலையுடன் கெடு முடிந்தது

வாஷிங்டன்: பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் நிறுவனர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பை ஐநா சபை ஏற்கனவே சர்வதேச தீவிரவாத அமைப்பாக அறிவித்து தடை விதித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவரான மசூத் அசார் (50), இந்தியாவில் நடக்கும் பல்வேறு நாச வேலைகளுக்கு மூளையாக இருப்பவர். இவரையும் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி 3 முறை முட்டுக்கட்டு போட்டுள்ளது. இதற்கிடையே, புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க இந்தியாவின் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புதிய தீர்மானத்தை கடந்த மாதம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காலக்கெடு இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்தது.

எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்காதபட்சத்தில், ஜெனீவாவில் நடந்து வரும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இத்தீர்மானம் நிறைவேற்றப்படும். மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டு அவரது சொத்துகள் முடக்கப்படும். அவர் எந்த நாட்டுக்கும் பயணம் செய்ய முடியாது. இந்த விஷயத்தில் இம்முறையும் சீனா முட்டுக்கட்டை போடுமா என சர்வதேச நாடுகள் கவனித்து வருகின்றன. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் பலாடினோ அளித்த பேட்டியில், ‘‘ஐநாவின் அல் கொய்தா தடை கமிட்டியின் கீழ் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பதற்கான அனைத்து கூறுகளும் மசூத் அசாருக்கு பொருந்துகிறது. இதில் ஐநாவுக்கும், சீனாவுக்கும் பரஸ்பர பங்குண்டு. இம்முறையும் அவரை தீவிரவாதியாக அறிவிப்பது தோல்வியில் முடிந்தால்,  அது பிராந்தியத்தின் நிலைத்தன்மைக்கும், அமைதிக்கும் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்’’ என எச்சரித்துள்ளார். இன்றைய ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டால், இந்தியாவுக்கு அது மிகப்பெரிய வெற்றியாக கருதப்படும்.

வழக்கம் போல் சீனா மழுப்பல்
இந்த தீர்மானத்தை வீட்டோ அதிகாரம் பெற்ற ஒரு நாடு எதிர்த்தாலும் கூட நிறைவேற்ற முடியாது. இந்த விஷயத்தில் வழக்கம்போல் சீனா முட்டுக்கட்டை போடும் மனநிலையிலேயே இருப்பதாக கூறப்படுகிறது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லு காங் அளித்த பேட்டியில், ‘‘அனைத்து தரப்பினருடன் ஆலோசனை நடத்தி, ஐநா தனக்கான பொறுப்பை நிலைநாட்டும். தீர்மானத்தை நிறைவேற்றும் விஷயத்தில் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட வேண்டியது அவசியம். அதேபோல, இந்த விஷயத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முடிவுகள் மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும்’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Masood Asar , UN, Masood Asar, international terrorist
× RELATED இந்தியாவின் 10 ஆண்டு கால முயற்சிக்கு...