×

விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு: போயிங் 737 மேக்ஸ் 8க்கு தடை: பல நாடுகளும் தரை இறக்கின

புதுடெல்லி: அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்திற்கு தற்காலிக தடையை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விதித்துள்ளது. உலக அளவில் பல நாடுகளும் இந்த விமானத்திற்கு தடை விதித்துள்ளன. எத்தியோப்பாவில் கடந்த 10ம் தேதி போயிங் 737 மேக்ஸ் 8 விமானம் விபத்துக்குள்ளாகி 157 பயணிகள் பலியாகினர். இதே போல, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேஷியாவிலும் இதே ரக விமானம் விபத்தாகி 189 பேரை பலி கொண்டது. இரு விபத்துகளும், விமானம் புறப்பட்ட அடுத்த சில விநாடிகளில் ஒரே மாதிரி நடந்தவை. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த ரக விமானத்தை பயன்படுத்த உலக நாடுகள் தடை விதித்து வருகின்றன. சீனா, ஆஸ்திரேலியா, யுஏஇ, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் போயிங் 737 விமானத்தை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் நேற்று முன்தினம் இரவு அவசர ஆலோசனை நடத்தியது.

அதில், நேற்று மாலை 4 மணிக்குள் அனைத்து போயிங் 737 மேக்ஸ் விமானத்தையும் தரை இறக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்திய வான் எல்லையில் இந்த ரக விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டதுடன், வெளிநாட்டு விமானங்கள் அந்தந்த நாடுகளுக்கு திரும்ப வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது. அதன்படி, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 13 போயிங் 737 மேக்ஸ் விமானங்கள், ஜெட் ஏர்வேஸ் 5 விமானங்களின் சேவையை நேற்று உடனடியாக நிறுத்தின. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு டிக்கெட் பணம் திரும்ப தருவதாகவும், சில பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் எனவும் ஸ்பைஸ் ஜெட் தெரிவித்தது. போயிங் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்ததாகும். இதனால், இந்த விமானத்திற்கு இதுவரை அமெரிக்கா எந்த தடையும் விதிக்கவில்லை. ஜப்பானிலும் தடை விதிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் தரப்பில் இருந்து நெருக்கடிகள் அதிகரித்து வரும் நிலையில், தடை விதிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமெரிக்க விமான  போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Aviation Ministry ,countries , Aviation, Ministry orders, Boeing 737 Max
× RELATED மக்களவை தேர்தலுக்கு தேர்தல் ஆணையம்...