×

டெல்லியில் இருந்து கொண்டு மாநில அரசுகளை அடக்கி ஆள்கிறார் மோடி : ராகுல் சரமாரி தாக்கு

நாகர்கோவில்: நாகர்கோவிலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சிகளின் பிரசார கூட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என உறுதிபட கூறினார். ராகுலின் பேச்சை காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு மொழி பெயர்த்து கூறினார். ராகுலின் பேச்சு பின்வருமாறு: மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இன்னும் நம் நினைவுகளில் வாழ்கிறார் என்றார். பல முறை கருணாநிதியை நேரில் சந்தித்து தாம் வாழ்த்து பெற்றதை ராகுல் நினைவு கூர்ந்தார். காமராஜரும், கலைஞரும் மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள் என்றார். தமிழகத்தின் வளர்ச்சியில் கருணாநிதி இரண்டற கலந்துள்ளார். தமிழ் கலாச்சாரத்திற்கும், தமிழ் மொழிக்கும் பிரதமர் மோடியால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழர்களை யாரும் அடக்கி ஆள முடியாது என்றார். தமிழக மக்கள் எப்போதும் உண்மையின் பக்கம் நிற்பவர்கள்.

தமிழகத்தில் பெயரளவில் மட்டுமே முதல்வராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். மற்றபடி தமிழக ஆட்சி டெல்லியில் இருந்து தான் நடைபெற்று கொண்டிருக்கிறது என சரமாரியாக தாக்கி பேசினார். டெல்லியில் இருந்து கொண்டு பல்வேறு மாநில அரசுகளை அடக்கி ஆள பார்க்கிறார் மோடி. திமுக - காங்கிரஸ் கூட்டணியை சாதாரண கூட்ணியாக நினைக்க வேண்டாம். இது மக்கள் நலன்களை காப்பதற்காக ஏற்பட்ட கூட்டணி. பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன் பொதுமக்களின் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன், 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்றார். ஆனால் அவர் சொன்னது எதையுமே நிறைவேற்றவில்லை.

டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகளின் நிலையை நினைத்து பெரும் வருத்தமுற்றேன். தொடர்ந்து பொய்கள் பேசுவதையே பிரதமர் வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது ஒவ்வொரு மாநிலங்களாக காங்கிரஸ் ஆட்சி வந்து கொண்டிருக்கிறது. நாங்கள் சமீபத்தில் ஆட்சிக்கு வந்த 3 மாநிலங்களில் ஆட்சிக்கு வந்த உடன் விவசாய கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறோம். தனது தொழில் வர்த்தக நண்பர்களுக்காகவே மோடி ஆட்சி நடத்தி கொண்டிருக்கிறார். நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. விவசாயிகளுக்கு எதிர்காலம் இல்லை. அம்பானி குழுமத்திற்கு விமானம் தயாரிப்பதில் முன்னனுபவம் இல்லை. ஆனால் ரூ.30,000 கோடியை ராணுவ விமான ஒப்பந்தத்திற்காக அம்பானிக்கு மோடி கொடுத்து விட்டார் என சாடினார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்படும் என்றார். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் GST வரி விதிப்பை மாற்றியமைப்போம் என்றார். ஒரே வரி, எளிமையான வரி என்ற முறையை கொண்டு வருவோம் என்றார். உண்மை வெல்லும் போது பிரதமர் மோடி சிறையில் இருப்பார் என ஆவேசமுடன் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narendra Modi ,state governments ,Rahul Saramari ,Delhi , Congress - DMK, Lok Sabha election, Rahul Gandhi speech
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...