×

நாடு முழுவதும் டிஜிபிக்கள் நியமனத்தின் காலவரம்பை 6 மாதமாக மாற்றி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதும் டிஜிபிக்கள் நியமனத்தின் காலவரம்பை 2 ஆண்டுகளில் இருந்து 6 மாதமாக மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் டிஜிபி நியமனம் தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளது. அதில், டிஜிபி பதவி காலம் முடிவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே அடுத்த டிஜிபி பெயர்களை யூபிஎஸ்சிக்கு பரிந்துரைக்க வேண்டும்.மாநில சட்டம் ஒழுங்கு போலீஸ் துறைத் தலைவராக (டிஜிபி) தகுதியான, மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளைத் தான் மாநில அரசுகள் நியமனம் செய்ய வேண்டும். மேலும் இடைக்கால டிஜிபி நியமனம், ஓய்வு பெறும் நாளில் நியமனம் என்று  யாரையும் பதவியில் அமர்த்தக் கூடாது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை கடந்த ஆண்டு ஜூலை மாதம் நீதிமன்றம் பிறப்பித்திருந்தது. இந்நிலையில், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பதவி காலம் வரும் ஜூன் மாதம் முடிய உள்ள நிலையில், அடுத்த சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யை நியமிக்க தகுதியான பெயர்களை 3 மாதத்துக்கு முன்பு பரிந்துரை செய்வதற்கான அவகாசம் குறைவாக இருந்தது. எனவே, தமிழக அரசு சார்பில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தகுதியான 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற மூத்த அதிகாரிகளை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்ய, தமிழகத்தில் யாரும் இல்லை என்றும், ஒரு வருடம் பதவிகாலம் எஞ்சியுள்ள பல மூத்த அதிகாரிகளே பதவியில் உள்ளனர் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்றத்தின் தீர்ப்பால் மூத்த அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தளர்த்த வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதுபோன்ற கோரிக்கைகளை முன் வைத்து பல மாநிலங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் கடந்த மாதம் 28-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவால் மூத்த அதிகாரிகளுக்கு அநீதி இழைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பீகார் மாநில அரசு தரப்பில் கூறப்பட்டது. அனைத்து மாநில அரசு தரப்பின் வாதங்களை கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்திவைத்தனர். டிஜிபிக்கள் நியமனம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக நேற்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், ஓய்வு பெற 6 மாத பணிக்காலம் இருந்தாலும் பணிமூப்பு அடிப்படையில் டிஜிபியாக நியமிக்கலாம் என்றும் இதற்கு முன்பு 2 ஆண்டு பணிக்காலம் உள்ளவரையே டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் டிஜிபிக்கள் நியமனத்திற்கான காலவரம்பை 2 ஆண்டுகளில் இருந்து 6 மாதமாக உச்சநீதிமன்றம் மாற்றி அமைத்தது. தமிழகம் உள்ளிட்ட மாநில அரசுகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் மாநில அரசு டிஜிபிக்களை சுயமாக நியமிக்க முடியாது என்றும் யுபிஎஸ்சி மட்டுமே டிஜிபிக்களை நியமிக்க முடியும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,country , DGPs Appointment, Term, Supreme Court
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...