‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை இயக்க பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் இந்தியாவும் தடை

புதுடெல்லி: எத்தியோப்பிய விமான விபத்தை அடுத்து ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை தரையிறக்க பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ள நிலையில் இந்தியாவும் தடை விதித்துள்ளது. எத்தியோப்பியாவின்  தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து கென்யா தலைநகர் நைரோபி சென்ற  எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம், நேற்று முன்தினம் விபத்துக்குள்ளானது. இதில்  157 பேர் பலியாயினர்.  அதன் கருப்பு பெட்டி நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல், இந்தோனேஷியாவின் லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர். 2 விமானங்களும் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்தை சந்தித்துள்ளன. ஒரே மாதிரியான விபத்து என்பதால், விமானத்தின் வேகத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என  சந்தேகிக்கப்படுகிறது.

இந்த விபத்தையடுத்து எத்தியோப்பிய ஏர்லைன்ஸ் நிறுவனம் அனைத்து ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை தரையிறக்கியுள்ளது. இரண்டு ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள், 5 மாதத்துக்குள் அடுத்தடுத்து  விபத்துக்குள்ளானதை அடுத்து பிரச்னைக்கு தீர்வு காணும் வரை போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை இயக்க வேண்டாம் என உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா, இந்தோனேஷியா உத்தரவிட்டன. இதனை  தொடர்ந்து சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை தரையிறக்க தடை விதித்தது.

இதற்கிடையே, ‘போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை இந்தியாவில் இயக்க அனுமதிக்கலாமா என்பது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சகம், விமான போக்குவரத்து துறை இயக்குனரகத்துடன் நேற்று முன்தினம்  ஆலோசனை நடத்தியது. இந்தியாவில் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஸ்பெஸ் ஜெட் நிறுவனங்கள் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் சிலவற்றை இயக்குகின்றன. அதனால் இந்த நிறுவனங்களிடம் விமானத்தின்  செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்க மத்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை இயக்க விமானிக்கு குறைந்தது  ஆயிரம் மணி நேரம் அனுபவம் வேண்டும் என்றும் துணை விமானிக்கு 500 மணி நேரம் அனுபவம் வேண்டும் என்றும் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது.

இந்நிலையில், போயிங் 737 மேக்ஸ் 8 மாடல் விமானங்களை இயக்க இந்தியா தடை விதித்துள்ளது. இது தொடர்பாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்  மீதான தடை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போயிங் நிறுவனம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வரை இந்த தடை அமலில் இருக்கும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: