×

‘மசூத் ரொம்ப... நல்லவர்’ என நற்சான்று தந்தவர்தான் தோவல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி:  ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாருக்கு  கடந்த 2010ம் ஆண்டு  நற்சான்றிதழ் வழங்கியவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
கடந்த 1999ம் ஆண்டு பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜ ஆட்சியின்போது 161 பயணிகளுடன் இந்திய விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. பயணிகளை விடுவிப்பதற்காக இந்திய சிறையில் இருந்த மசூத் அசார், முஸ்தாக் அகமது சர்கார் மற்றும் அகமது ஒமர் சயீத் ஷேக் ஆகிய மூன்று பேரும் விடுவிக்கப் பட்டனர். இந்நிலையில், டெல்லியில் கட்சி தொண்டர்களிடையே பேசிய ராகுல்காந்தி, ‘‘56 இன்ச் மார்பளவு கொண்ட அவர்கள் இதற்கு முன் தங்களது ஆட்சியில் நடந்தவற்றை நினைவு கூற வேண்டும். தற்போதுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ‘மசூத் அசார் ஜி’யுடன் விமானத்தில் கந்தகார் சென்றார். பின்னர் அசாரை அங்கு பாதுகாப்பாக ஒப்படைத்தார். அந்த மசூத் அசார் தான் புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ளார்” என்றார்.

இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மசூத் அசாரை மரியாதையுடன் மசூத் அசார் ஜி என குறிப்பிட்டதை பாஜ கடுமையாக விமர்சித்து கண்டனம் தெரிவித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் தலை மை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது டிவிட்டர் பதிவில், “அஜித் தோவல், பாஜ அரசு தான் தீவிரவாதி மசூத் அசாரை விடுவித்தது என்ற ரகசியத்தை கூறிவிட்டார். மசூத்  அசாரை விடுவிப்பது அரசியல் முடிவு என்றும் அவர் கூறியுள்ளார். அசாருக்கு அவர் நற்சான்றிதழ் அளித்துள்ளார்” என்று கூறியுள்ளார். மேலும் இதனுடன் 2010ல் அஜித் தோவல் அளித்த பேட்டியையும் அவர் இணைத்துள்ளார். இதில் அஜித் தோவல் நேர்காணல் ஒன்றில், ‘‘மசூத் அசாருக்கு குண்டுகளை தயாரிப்பது பற்றி தெரியாது. அவருக்கு துப்பாக்கியால் சுட கூட தெரியாது. மசூத் அசாரை விடுவித்ததால் காஷ்மீரில் சுற்றுலா துறை 200% வளர்ச்சியடைந்துள்ளது’’ என்று கூறியுள்ளார்.

2 கோடி வேலைவாய்ப்பு எங்கே?பிரியங்கா ‘நச்’ கேள்வி
பொதுச்செயலாளர் பதவி ஏற்ற பின் பிரியங்கா காந்தி முதல் முறையாக இந்தப் பேரணியில் பங்கேற்றுப் பேசினார். அவர் பேசியதாவது:  இந்த தேர்தல் மூலம் உங்களின் எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள். வெற்று வாக்குறுதிகளுக்கு மயங்கி விடாதீர்கள். இதற்கு முன் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் என்னவாகின? ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் தருவதாக கூறியது என்ன ஆனது? பெண்கள் பாதுகாப்பு உறுதி எங்கே போச்சு? 2 கோடி வேலைவாய்ப்பு வந்ததா?

எனவே தேர்தல் நேரத்தில் சரியான கேள்வியை சரியான நேரத்தில் கேளுங்கள். சிலர் வெறுப்பு அரசியலை பரப்பலாம். ஆனால் நாம் நாட்டை பாதுகாத்து வளர்ச்சியை நோக்கி நகர்த்த வேண்டும். அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடித்தளமாக கொண்டு கட்டமைக்கப்பட்ட நாடு இந்தியா. இன்றோ நாட்டில் நடக்கும் விஷயங்கள் மிகவும் கவலை அளிக்கின்றன. நாட்டின் அரசு அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன. உங்களின் ஓட்டுதான் மிகப்பெரிய ஆயுதம் என்பதை மறந்து விடாதீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மோடி, அமித்ஷா மண்ணில் பிரசாரத்தை தொடங்கிய காங்.
பிரதமர் மோடி, பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் 58 ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கடைசியாக 1961ம் ஆண்டு பாவ்நகரில் நடந்தது. தற்போது தேர்தல் நடக்க உள்ள நிலையில் பிரதமர் மோடியின் சொந்த மண்ணில் காங்கிரஸ் தனது செயற்குழு கூட்டத்தை நடத்தியிருப்பதுடன், தேர்தல் பிரசாரத்தையும் தொடங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மகாத்மாவுக்கு  மரியாதை
செயற்குழு கூட்டத்திற்கு முன்பாக, சபர்மதி ஆசிரமத்திற்கு சென்ற காங்கிரஸ் தலைவர்கள், அங்கு மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினர். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் முக்கிய போராட்டமான தண்டி யாத்திரை கடந்த 1930ம் ஆண்டு, மார்ச் 12ம் தேதி சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தொடங்கப்பட்டது. அதே நாளில் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒருமுறை வர விட மாட்டோம்
செயற்குழு கூட்டத்தில் சோனியா காந்தி பேசுகையில், ‘‘தேச  நலன் சார்ந்த விஷயங்களை மோடி அரசு அரசியலாக்கி வருகிறது. பிரதமர் மோடி தன்னை பாதிக்கப்பட்டவர் போல காட்டிக் கொள்கிறார். ஆனால், உண்மையிலேயே அவரது தவறான கொள்கைகளால் பாதிக்கப்பட்டிருப்பது நாட்டு மக்கள்தான்’’ என்றார். ராகுல் பேசுகையில், ‘‘பொய் வாக்குறுதி, நாட்டை தவறாக வழிநடத்தும் மோடியை மீண்டும் ஒருமுறை பிரதமராக காங்கிரஸ் விடாது’’ என்றார். கூட்டத்தில், புல்வாமா தாக்குதலில் பலியான 40 சிஆர்பிஎப் வீரர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரதமரை கண்டித்து தீர்மானம்
செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடியை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ‘‘பிரதமர் மோடி தனது பொய் வாக்குறுதிகள், தோல்விகளில் இருந்து மக்களை திசை திருப்ப, தேசிய பாதுகாப்பு விவகாரத்தை பயன்படுத்திக் கொள்வது கடும் அதிருப்தி அளிக்கிறது. எதையும் எதிர்த்து நிற்கும் ஜனநாயக நாடு இந்தியா. நமது வீரர்களை எண்ணி நாங்கள் பெருமை கொள்கிறோம். எந்த வன்முறை சக்தியாலும், தீவிரவாதத்தாலும் ஒருபோதும் நம்மை வீழ்த்தி விட முடியாது. தற்போது நாட்டில் பெண்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அரசியலமைப்பு நிறுவனங்கள், தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பாதுகாப்பு அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படுகிறது’’ என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : one ,Masood , Toval Congress
× RELATED கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை.....