×

அதிமுக அமைச்சர்களை விமர்சனம் செய்த வழக்கில் டிடிவி.தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு: முதல்வரை விசாரிக்க முடிவு

சென்னை: அதிமுக அமைச்சர்களை மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்று விமர்சனம் செய்த வழக்கில் டிடிவி.தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.   மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் திறக்கப்பட்டது. அந்த சிலை ஜெயலலிதாவின் தோற்றம் போல் இல்லை என பலர் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கடந்த 27.2.2018 அன்று ஆர்.கே.நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதா சிலை தயாரிப்பு பணியை தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் பார்க்கவில்லை. அம்மா, அம்மா என்று கூறி அவர் திட்டங்களை நிறைவேற்றவில்லை. சிலையை மாற்றம் செய்யமுடியாது, வேண்டுமானால் புதிய சிலை அமைக்கலாம். முதல் கோணல், முற்றிலும் கோணல். மேலும் தமிழக அமைச்சர்களை கோமாளி என்றுதான் நினைத்தேன். ஆனால் அது மனநிலை பாதிப்பாக மாறியுள்ளது.

அவர்கள் 6 மாதம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை வந்துள்ளது என்று கூறியதாக செய்தி வெளியாகின.  இதை அடிப்படையாக வைத்து அதிமுக அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக முதன்மை அரசு வக்கீல், சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு குற்றச்சாட்டு பதிவுக்காக நீதிபதி சாந்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிவி.தினகரன் நேரில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி குற்றச்சாட்டை படித்து காட்டினார். அதனை கேட்ட தினகரன், இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக தொடரப்பட்டுள்ள பொய் வழக்கு என்று கூறி குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார்.  இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.  பின்னர் இந்த வழக்கில் டிடிவி.தினகரன் தரப்பில் ஆஜரான வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் கூறுகையில், அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை முடிந்த பின்னர், வழக்கு விவகாரத்தில் தொடர்புடைய  தமிழக முதல்வர், அமைச்சர்கள் ஜெயக்குமார்,  மணிகண்டன் உள்ளிட்டோரிடம் குறுக்கு விசாரணை நடத்துவோம் என்றார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ministers, TTV Thinakaran, Chief Minister
× RELATED பீகாரில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு