×

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது உள்ள குற்ற வழக்குகளை பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்

* பாதுகாப்பு பணிக்கு 200 கம்பெனி படைகள்
* தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

சென்னை: மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு இருந்தால் அதுகுறித்து பத்திரிகை, தொலைக்காட்சி மூலம் விளம்பரம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. அதன்படி, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் சரியான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.57,12,400 ரொக்கப்பணம் முதல் நாளிலேயே பறிமுதல் செய்யப்பட்டது. இதில் திருவாரூரில் மட்டும் ஒரு காரில் இருந்து ரூ.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விளம்பரம் அழிப்பு: தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் எழுதப்பட்டிருந்த 2,653 சுவர் விளம்பரங்கள், 5,237 போஸ்டர்கள், 1,561 பேனர்கள் என மொத்தம் 11,375 விளம்பரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகை அந்தந்த கட்சிகளிடம் வசூலிக்கப்படும். மேலும் 3,088 தனியார் சுவர்களில் வளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது. அதுவும் அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் கையில் 3 தொகுதி முடிவுகள்: மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் வாக்குப்பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வந்துள்ளது. இதுபற்றி நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை கலெக்டர் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி விவாதித்துள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கும் அவர்களின் கருத்துக்களை அனுப்பி உள்ளார். இது தொடர்பாக வழக்கு நாளை (14ம் தேதி) நீதிமன்றத்தில் வரும்போது மதுரை தொகுதியில் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதேபோன்று அன்றைய தினம் தேர்தல் நடத்தினால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து காவல் துறை சார்பிலும் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்படும்.

தமிழகத்தில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதி இடைத்தேர்தலுடன் திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய 3 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் இந்த மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து என்ன நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது என்று இன்று (நேற்று) மாலைக்குள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு தமிழக தலைமை தேர்தல் அலுவலகத்தில் இருந்து அறிக்கை அனுப்பி வைக்கப்படும். திருப்பரங்குன்றம் தொகுதி பற்றி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றுவிட்டதாக கூறப்படுகிறது. வாபஸ் வாங்கினாலும், இதுபற்றி நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கும் திட்டத்தை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன் தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் போடவில்லை. நேற்று முன்தினம் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திலும் இதுபற்றி யாரும் எந்த கருத்தும் சொல்லவில்லை. தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக 200 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் கேட்கப்பட்டுள்ளது. ஒரு கம்பெனியில் 180 முதல் 200 வீரர்கள் வரை இருப்பார்கள்.

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்காக 10 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் வருகிற 15ம் தேதி வருகிறார்கள். கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மக்களவை தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தப்படுபவர்கள் மீது கிரிமினல் குற்றம் இருந்தால் அதுபற்றி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்ய வேண்டும். அதாவது, குற்ற வழக்கு நடந்து கொண்டிருந்தாலும் அல்லது வழக்கில் குற்றவாளி என்றும் தீர்ப்பு கூறப்பட்டு இருந்தாலும், வேட்புமனு வாபஸ் தேதியில் இருந்து தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன் 3 முறை வெவ்வேறு தேதிகளில் விளம்பரம் செய்ய வேண்டும். பத்திரிகையில் பெரிய எழுத்தில் இந்த விளம்பரம் இடம்பெற வேண்டும். சுயேட்சை வேட்பாளர்கள் தனியாகவும், கட்சி சார்பான வேட்பாளராக இருந்தால், மொத்தமாகவும் விளம்பரம் செய்யலாம். இந்த விளம்பரத்துக்கான செலவுகள், வேட்பாளரின் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election ,Lok Sabha ,newspaper , Candidates, Lok Sabha election, criminal cases, newspaper
× RELATED 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் புது...