×

சைதாப்பேட்டை அரசு விடுதியில் போதையில் மாணவர்கள் ஆயுதங்களுடன் மோதல்: 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சைதாப்பேட்டை அரசு விடுதியில் போதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 6 மாணவர்கள் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக 4 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டையில் எம்சி.ராஜா அரசு மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சில மாணவர்கள் மது போதையில் விடுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை சக மாணவர்கள் எதிர்த்து கேள்வி கேட்டுள்ளனர். இதனால் போதை மாணவர்களுக்கும், தட்டிக்கேட்ட மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த போதை மாணவர்கள் எதிர்தரப்பு மாணவர்களை ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.

பதிலுக்கு எதிர்தரப்பு மாணவர்களும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவர் விடுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விடுதி காப்பாளர் சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார், மோதலில் படுகாயமடைந்த 6 மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், போதையில் தாக்குதல் நடத்திய 4 மாணவர்களை போலீசார் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சைதாப்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : children , Saidapet, government hostel,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...