பள்ளிக்கரணையில் உள்ள வி.ஏ.ஓ., ஆர்.ஐ., அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை: கணக்கில் வராத ரூ.1.25 லட்சம் பறிமுதல்

வேளச்சேரி: பள்ளிக்கரணை கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1.25 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர். வேளச்சேரி அடுத்த பள்ளிக்கரணையில்  கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு வாரிசு, சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்று உள்பட சான்றுகளை வழங்க அதிகாரிகள் அதிக லஞ்சம் வாங்குவதாக தமிழக லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சங்கரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் 10 பேர் திடீரென பள்ளிக்கரணை கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் நேற்றுமாலை நுழைந்து சோதனை செய்தனர்.  அப்போது வருவாய் ஆய்வாளர் நந்தகுமார், கிராம நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் அலுவலகத்தில் இருந்தனர்.  இந்த சோதனையின்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து ரூ.1.25 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கிராம நிர்வாக அதிகாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>