×

2020 ஒலிம்பிக்சுக்கு தகுதி பெறுவதே இலக்கு..... சதீஷ்குமார் உற்சாகம்

சென்னை: ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்காக தீவிர பயிற்சியில்  ஈடுபட்டுள்ளேன் என்று பளுதூக்குதல் வீரர் சிவலிங்கம் சதீஷ்குமார் தெரிவித்தார். டம்பில்வேர்,  அவதார் நிறுவனங்கள் இணைந்து தென்னிந்தியாவில் முதல் முறையாக உடல்நல மற்றும் உடல் தகுதிக்கான ஃபிட்அப் ஃபெஸ்ட்-2019 என்ற நிகழ்ச்சியை ஏப்ரல் 6, 7 தேதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளன. இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.  இதில் பங்கேற்ற சதீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் இளைஞர்கள் உடல்நலனில் அக்கறை காட்டாத போக்கு நிலவி வருகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் மனதும் செயல்களும் ஆரோக்கியமாக இருக்கும். என்னை பொறுத்தவரையில் முதல் முறையாக காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பிறகு உடல் நலன், உடல் தகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தேன்.  ஜப்பானில் 2020ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்க உள்ளேன். அதற்காக பயிற்சி செய்து வருகிறேன். தகுதி சுற்று போட்டிகளாக ஆசிய சாம்பியன் போட்டி உட்பட மூன்று போட்டிகள் நடைபெற உள்ளன. அதில் வெற்றி பெற தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

காயம் காரணமாக ஒரு நாளைக்கு 6 முதல் எட்டு மணி நேரம் மட்டுமே பயிற்சியாளர்களின் ஆலோசனையின்படி பயிற்சி செய்கிறேன். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு உள்ளவர்களுக்கான முன்னுரிமை பட்டியலில் இப்போது நான் இடம்பெறவில்லை. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதி பெற்ற உடன் முன்னுரிமைப் பட்டியலில் சேர்ப்பதாக உறுதியளித்துள்ளனர். இப்போது எனது பயிற்சி உள்ளிட்ட தேவையான வசதிகளை அரசு செய்து வருகிறது தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால் வீட்டுக்கு செல்வது அரிதாகவே நடக்கிறது. பல மாதங்களுக்கு ஒரு முறை தான் செல்ல முடிகிறது. மேலும், வேலூர் சத்துவாச்சாரியில் எங்கள் வீட்டு அருகே உடற்பயிற்சிக் கூடம் ஒன்றை திறந்துள்ளேன். அதில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க ஆர்வமுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன்.  அவர்கள் சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்கான திறனை, சூழலை அளிக்கும் வகையில் பயிற்சிகள் இருக்கும். இவ்வாறு சதீஷ்குமார் சிவலிங்கம் தெரிவித்தார். பிராண்ட் அவதார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஹேமச்சந்திரன், டெம்பில்வேர் நிறுவனர் அபிஷேக் ரங்கசாமி உட்பட பலர் உடன் இருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 2020 Olympics , Olympics, Sathishkumar,
× RELATED ஜப்பானில் ஜூலை 24ல் தொடங்கும்...