×

வடகொரிய அதிபர் கிம் ஜோங்குடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ட்ரம்ப் தயார்

வாஷிங்டன் : அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜோங் உன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி அமெரிக்கா-வடகொரியா இடையே முதல் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது இரு நாடுகள் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தில், கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா பாடுபடும் என கிங் ஜோங் உன் உறுதியளித்துள்ளார். அதன்பின்னர் வடகொரியா அணுகுண்டு சோதனை ஏவுகணை சோதனைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் கடந்த மாதம் 27, 28ம் தேதிகளில் வியட்நாமில் 2வது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். வியட்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. அணு ஆயுதத்தை முழுமையாக கைவிட வடகொரியா ஒப்புக்கொள்ளுமா என்பதே பேச்சுவார்த்தையின் முக்கிய விஷயமாக இருந்தது. ஆனால் வடகொரியா தன் மீதான பொருளாதார தடையை முழுமையாக நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததை அமெரிக்கா நிராகரித்ததையடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் உச்சிமாநாடு எந்தவித உடன்பாட்டையும் எட்டாமல் முடிந்தது.

உச்சிமாநாட்டில் இரு தலைவர்களும் கூட்டு உடன்படிக்கைகையில் கையெழுத்திடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் உடன்பாடு எட்டப்படாததால், இரு தரப்பு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளில் ஒரு பகுதியை கூட அகற்ற முன்வராததுதான் இந்த பேச்சுவார்த்தை தோல்விக்கு முக்கிய காரணம் என வடகொரியா தரப்பில் கூறப்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்துவதற்கான பணிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின. ஏவுகணை தளத்தை மறுக்கட்டமைப்பு செய்து வரும் புகைப்படங்களும் வெளியாகின.

இதுகுறித்து பேசிய ட்ரம்ப் வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தினால் நான் மிகுந்த ஏமாற்றம் அடைவேன் என்றும், என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜோங் உன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், வியட்நாம் சந்திப்பின்போது டிரம்ப் பாதியிலேயே எழுந்து சென்றதற்கு பேச்சுவார்த்தை முறிந்ததாக பொருள் கிடையாது. அந்த சந்திப்பில் உடன்பாடு எட்டப்படாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்று தகவல் அளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kim Jong ,North Korean , North Korean President,Kim Jong un,Trump,Nuclear test
× RELATED போருக்கு தயாராகுங்கள்: ராணுவ தளத்தை பார்வையிட்ட வடகொரியா அதிபர் கிம் ஆணை