பிஎன்பி பாரிபா ஓபன் மூன்றாவது சுற்றில் நடால்: பியான்கா முன்னேற்றம்

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீரர் ரபேல் நடால் தகுதி பெற்றார்.அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 2வது சுற்றில், ஊள்ளூர் வீரர் ஜாரெட் டொனால்ட்சனுடன் (196வது ரேங்க்) மோதிய நடால் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி 1 மணி, 12  நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. மற்றொரு 2வது சுற்றில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் 6-1. 7-5 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் பீட்டர் கோஜோவ்சிக்கை வீழ்த்தினார். முன்னணி வீரர்கள் கெய் நிஷிகோரி (ஜப்பான்), டெனிஸ் ஷபோவலாவ் (கனடா), மரின் சிலிச் (குரோஷியா), பேபியோ பாக்னினி (இத்தாலி), ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா (சுவிஸ்), டானில் மெட்வதேவ் (ரஷ்யா) ஆகியோரும் 3வது  சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - டெனிஸ் ஷபோவலாவ் (கனடா) ஜோடி 4-6, 6-1, 8-10 என்ற செட் கணக்கில் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) - பேபியோ பாக்னினி (இத்தாலி)  ஜோடியிடம் போராடி தோற்றது.
மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் கனடா வீராங்கனை பியான்கா ஆண்ட்ரீஸ்கு 6-1, 6-2 என்ற நேர் செட்களில் ஸ்டெபானி வோஜெலியை (சுவிஸ்) வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். இந்த தொடரில்  அவர் ‘வைல்டு கார்டு’ சிறப்பு அனுமதி பெற்று களமிறங்கி வெற்றிகளைக் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.முன்னணி வீராங்கனைகள் சிமோனா ஹாலெப் (ரோமானியா), கிகி பெர்டன்ஸ் (நெதர்லாந்து), கார்பினி முகுருசா (ஸ்பெயின்), எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), ஆஷ்லி பார்தி (ஆஸி.) ஆகியோரும் 4வது சுற்றுக்கு முன்னேறி  உள்ளனர். 3வது சுற்றில் முகுருசாவுடன் மோதிய அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் 3-6, 0-1 என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில், காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nadal ,round ,BNP Paribas Open , BNB ,Paribu Open, Nadal, third round, Bianca progress
× RELATED ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில்...