×

இரட்டை சதம் விளாசினார் டெய்லர் நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு: வங்கதேசம் திணறல்

வெலிங்டன்: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 432 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ராஸ் டெய்லர் இரட்டை சதம்  விளாசி அசத்தினார்.பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. வங்கதேசம் முதல் இன்னிங்சில் 211 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (61 ஓவர்). தமிம் இக்பால் 74, லிட்டன் தாஸ் 33,  ஷத்மன் இஸ்லாம் 27, சவும்யா சர்க்கார் 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். நியூசிலாந்து பந்துவீச்சில் வேக்னர் 4, போல்ட் 3, சவுத்தீ, கிராண்ட்ஹோம், ஹென்றி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து, முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 432 ரன் குவித்து டிக்ளேர் செய்தது (84.5 ஓவர்). கேப்டன் கேன் வில்லியம்சன் 74 ரன் (105 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), ராஸ் டெய்லர் 200 ரன் (212  பந்து, 19 பவுண்டரி, 4 சிக்சர்), நிகோல்ஸ் 107 ரன் (129 பந்து, 9 பவுண்டரி), கிராண்ட்ஹோம் 23* ரன் விளாசினர். வங்கதேச பந்துவீச்சில் அபு ஜாயித் 3, தைஜுல் 2, முஸ்டாபிசுர் 1 விக்கெட் எடுத்தனர்.இதைத் தொடர்ந்து, 221 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம், 4ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 80 ரன் எடுத்துள்ளது. தமிம் 4, ஷத்மன் 29, மோமினுல் ஹக் 10 ரன்னில்  ஆட்டமிழந்தனர். முகமது மிதுன் 25, சவும்யா சர்க்கார் 12 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க, வங்கதேச அணிக்கு இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 141 ரன் தேவை என்ற நிலையில்  இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.இந்த டெஸ்டின் முதல் 2 நாள் ஆட்டமும் கனமழை காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Taylor ,Bangladesh ,New Zealand , Taylor, double century, New Zealand, win
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...