×

இந்தியாவில் முதல் முறையாக தமிழக பெண் எலும்பு மஜ்ஜை தானம்: 3 மாத குழந்தைக்கு மறுவாழ்வு

கொல்கத்தா: இறக்கும் தருவாயில் இருந்த 3 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை தானம் செய்து மறுவாழ்வு கொடுத்த தமிழகத்தை சேர்ந்த மாசிலாமணி, இந்தியாவின் முதல் எலும்பு மஜ்ஜை தானம் செய்த பெண் என்ற  பெருமையை பெற்றுள்ளார்.எலும்புகளில் பஞ்சுப் போன்ற பகுதிகளிலும் புரையெலும்புப் பகுதிகளிலும் குறிப்பாக முதுகெலும்பு, நடுவிலா எலும்பு, இடுப்பு (பெல்விக்) எலும்புகளில் இருந்து சிறிதளவு எடுக்கப்படும் திரவம்தான் எலும்பு மஜ்ஜை. லுகேமியா,  லிம்போமா, குழந்தைகளுக்கு ஏற்படும் கேன்சர் போன்றவற்றிற்கு இந்த எலும்பு மஜ்ஜையோ (போன் மாரோ) அல்லது ரத்தக் குருத்து அணுக்களோ (பிளட் ஸ்டெம் செல்)  சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகிறது.கீமோதெரப்பி, ரேடியேஷன் என்று சில சிகிச்சை முறைகள் இருந்த போதிலும், பவ்வேறு கட்ட ஆராய்ச்சிக்குப் பின் எலும்பு மஜ்ஜை சிகிச்சை நிரந்தர தீர்வாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டம் முதலிபாளையத்தைச் சேர்ந்த மாசிலாமணி என்ற பெண் எலும்பு மஜ்ஜை தானம் செய்தார். இவருக்கு தலசீமியாவினால் (ரத்த சோகை) பாதிக்கப்பட்ட பெண் குழந்தை உள்ளது. அவரது கணவர்  கவியரசன் ஒரு நெசவாளர். தனிப்பட்ட அலுவல் விஷயமாக சென்னைக்கு வந்த அவர், டெல்லியைச் சேர்ந்த 3 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை தானம் செய்து அதனை காப்பாற்றி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ``எங்களுடைய மகள் பிறந்த சிறிது நாட்களிலேயே ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. நானும் எனது கணவரும் தாத்ரி தொண்டு நிறுவனத்தில் லுகேமியா எதிர்ப்பு  அணு சோதனைக்கு சென்று பதிவு செய்திருந்தோம். அதன் மூலமே இப்போது எலும்பு மஜ்ஜை தானம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்த தானத்தின் மூலம் நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன். அந்த குழந்தை  வாழ மறுஉயிர் கொடுத்திருப்பதன் மூலம் அதற்கு நானும் தாயாகி விட்டேன். மூட நம்பிக்கையில் ஊறி உள்ளதால், எலும்பு மஜ்ஜை தானம் செய்தால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று பயமுறுத்துகின்றனர். அவ்வாறு எதுவும்  ஏற்படாது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India , first,India, Tamil Nadu ,woman donates, bone marrow
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...