×

ரிசர்வ் வங்கி இயக்குநர்கள் சிலர் உடன்படவில்லை கருப்பு பணத்தை மீட்க பணமதிப்பு நீக்கம் தீர்வல்ல

* மத்திய அரசுக்கு முன்னரே அறிவுறுத்தப்பட்டது
ஆலோசனை கூட்டம் பற்றி பரபரப்பு தகவல்

புதுடெல்லி: பண மதிப்பு நீக்கம் கருப்பு பணத்தை மீட்க உதவாது என ரிசர்வ் வங்கியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய அரசிடம் அறிவுறுத்தப்பட்டதாகவும், மத்திய அரசின் கருத்துக்கு சில இயக்குநர்கள் உடன்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கருப்பு பணத்தை மீட்கவும், கள்ள நோட்டை ஒழிக்கவும் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டு செல்லாது என 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அவற்றை பெட்ரோல் பங்க், மருத்துவமனை, மின்சார கட்டணம் உட்பட 23 சேவைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. அதோடு, வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்ற 50 நாள் அவகாசம் தரப்பட்டது.
 பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு வங்கிகளுக்கு வந்த பணத்தை எண்ணிய ரிசர்வ் வங்கி, 99.3 சதவீத பணம் வங்கிகளுக்கு வந்து விட்டதாக தெரிவித்தது. பண மதிப்பு நீக்கத்தால் பொருளாதார பின்னடைவு, வேலை இழப்பு, தொழில்கள் பாதிப்பு என அடுத்தடுத்த பாதிப்புகள் ஏற்பட்டதால் எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்தன. மத்திய அரசு அவசர கதியில் ஆராயாமல் பணமதிப்பு நீக்கத்தை அறிவித்து விட்டதாக குற்றம்சாட்டின. இந்த சூழ்நிலையில், பணமதிப்பு நீக்கத்துக்கு முன்பு ரிசர்வ் வங்கியுடன் நடந்த ஆலோசனை கூட்டம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இதில், கருப்பு பணத்தை ஒழிக்க பண மதிப்பு நீக்கம் பயன்படாது என்று ரிசர்வ் வங்கி தரப்பில் கருத்து கூறப்பட்டது. ஆனால் மத்திய அரசு இதுவே தீர்வு என கருதியது. கருப்பு பணம், கள்ள நோட்டு ஒழிப்பு, வங்கிகள் மூலம் பரிவர்த்தனை அதிகரிப்பு போன்றவற்றுக்கு பணமதிப்பு நீக்கம் கொடுக்கும் என மத்திய அரசு தரப்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

 இதில், வங்கிகள் மூலம் பரிவர்த்தனை அதிகரிக்கும் என்பதை ரிசர்வ் வங்கியும் ஒப்புக்கொண்டது. ஆனால், பண மதிப்பு நீக்கம் கருப்பு பணத்தை மீட்க உதவாது என்பதில் சில இயக்குநர்கள் உடன்படவில்லை. பணமதிப்பு நீக்கம் பற்றி 6 மாதங்களாக ஆலோசனை நடந்தது. குறிப்பாக நவம்பர் 8ம் தேதி மாலை 5.30 மணிக்கு ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழு கூட்டத்துடன் சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, கருப்பு பணம் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தில் முதலீடு செய்யப்பட்டு விட்டது. பணமதிப்பு நீக்கத்தால் இவற்றுக்கு எந்த தாக்கமும் ஏற்படாது. மாறாக, 2016-17 நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு குறுகிய கால பாதிப்பு ஏற்படும். நாட்டில் மொத்தம் புழக்கத்தில் உள்ள கரன்சியில் கள்ள நோட்டு ரூ.400 கோடி. புழக்கத்தில் உள்ள மொத்த மதிப்புடன் ஒப்பிடுகையில் கள்ள நோட்டு மிக குறைந்த சதவீதம்தான். இதற்காக பண மதிப்பு நீக்கம் தேவையில்லை. கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணம் தீவிரவாத செயல்பாடுகளுக்கு வழங்கப்படுவதை தடுப்பதற்கு பணமதிப்பு நீக்கத்தை ரிசர்வ் வங்கி தீர்வாக கருதவில்லை.

 பணமதிப்பு நீக்கம் செய்தவுடன் அவற்றை மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள் போன்றவற்றில் பயன்படுத்த ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்படி அனுமதிக்கப்பட்டது. மத்திய அரசுடன் நடந்த கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் அப்போதைய கவர்னர் உர்ஜித் படேல், துணை கவர்னர்கள் ஆர்.காந்தி, எஸ்.எஸ்.முத்ரா , இயக்குநர்கள் அஞ்சுலி சிப் துக்கால் (அப்போதைய நிதிச்சேவைகள் செயலர்), சக்தி காந்ததாஸ் (அப்போதைய பொருளாதார விவகார செயலாளர்), மற்றும் இயக்குநர்கள் நாசிகெட் மோர், பாரத் என்.ஜோஷி, சுதிர் மன்காத், ரிசர்வ் வங்கி முதன்மை பொது மேலாளர் எஸ்.கே.மகேஸ்வரி ஆகியோர் பங்கேற்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் மொத்தம் புழக்கத்தில் உள்ள கரன்சியில் கள்ள நோட்டு மிக குறைந்த சதவீதம்தான். இதற்காக பண மதிப்பு நீக்கம் தேவையில்லை.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Some ,Reserve Bank Directors ,cash withdrawal , Reserve Bank, black money
× RELATED ‘ஹோலி’ கொண்டாட்டம் என்ற பெயரில்...