×

ஆட்சியை எப்படியாவது தக்க வைக்க 18 தொகுதிகளுக்கு ரூ.1800 கோடி: அதிமுகவின் ஷாக் பிளான்

சென்னை: ஆட்சியை எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என்று அதிமுக, 18 தொகுதிகளுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் ரூ.1800 கோடியை தொகுதிகளுக்கு கொண்டு சென்று பதுக்கிவிட்டதாம். இதை முன்னின்று செய்வது ஒரு மூத்த அமைச்சர்தான் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதிமுகவில் 135 எம்எல்ஏக்கள் இருந்தனர். அதில் 18 பேர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால், அவர்களின் பதவி பறிக்கப்பட்டது. இதனால் அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 117 ஆக குறைந்தது. அதிலும் 3 எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களைத் தவிர கூட்டணிக்கட்சிகளைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோரும் அதிமுகவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இதனால் அதிமுகவின் எம்எல்ஏக்களின் பலம் 111 ஆக குறைந்தது. மேலும் குற்ற வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டதால், ஓசூர் எம்எல்ஏ பாலகிருஷ்ண ரெட்டியின் பதவி பறிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் மரணத்தால் அந்த தொகுதி காலியானது. இதனால் அதிமுகவின் பலம் 109ஆக குறைந்தது. 18 தொகுதிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி பார்த்தால், 7 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அதிமுக ஆட்சி நீடிக்கும். ஆனால் தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிரான அலை வீசுகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது 13 பேர் பலியானது, ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், பசுமை சாலை அமைக்கும் திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் தமிழகத்துக்கு எதிரான திட்டங்களை அதிமுக ஆதரித்ததால், மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.

 மேலும், மத்திய பாஜ அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு, ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளில் பல்லாயிரம் பேர் வேலைகளை இழந்துள்ளனர். வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இதனால் அதிமுகவுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது. மக்கள் உச்சக்கட்ட கோபத்தில் உள்ளனர். இதனால் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் சூழ்நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டுள்ளது. இதனால் ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி வீதம் 18 தொகுதிக்கும் ரூ.1800 கோடியை அதிமுக ஒதுக்கியுள்ளது. ஒவ்வொரு மக்களவை தொகுதிக்கும் ஒருவர் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதில் பெரும்பாலும் அமைச்சர்கள்தான் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது 18 தொகுதிக்கும் தனி பொறுப்பாளர்களை அதிமுக நியமித்துள்ளது. அவர்களை இரு நாட்களுக்கு முன்னர் ஷாக்கடிக்கும் அமைச்சர் தனது வீட்டுக்கு அழைத்துள்ளார். அதில் 3, 3 அமைச்சர்களாக சேர்ந்து சென்று பேசியுள்ளனர்.

ஒவ்வொரு தொகுதி பொறுப்பாளருக்கும் ரூ.100 கோடி பணம் வழங்கப்படும். அதை தொகுதியில் தேர்தல் செலவு, தொண்டர்களுக்கு செலவு, வாக்காளர் செலவு என்று பிரித்து வழங்கப்படும். அதை முறைப்படி செலவு செய்வது குறித்த தனி திட்டமும் வழங்கப்படும். அதன்படி செலவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார். பணம் தொகுதிக்கு வந்து சேரும் என்றும் அறிவித்துள்ளார். தற்போது பணம் முழுமையாக தொகுதிகளுக்கு சென்று விட்டதாம். கடந்த முறை, கரூர் அன்புநாதன் மூலம் ஆம்புலன்சில் பணம் கடத்தப்பட்டது. தற்போது, எப்படி பணம் கடத்தப்பட்டது என்ற விவரத்தை அமைச்சர் தெரிவிக்கவில்லை. ஆனால் உங்களிடம் பணம் வந்து சேரும் என்று மட்டும் கூறியுள்ளார். இதனால் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் அமைச்சர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் குஷியாக புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஒவ்வொரு மக்களவை தொகுதிக்கும் ஒருவர் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதில் பெரும்பாலும் அமைச்சர்கள்தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituencies , AIADMK
× RELATED 10 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் 4ம்...