×

லாப உச்சவரம்பை குறைத்ததால் 390 புற்றுநோய் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிவு

புதுடெல்லி: லாப உச்சவரம்பு நிர்ணயம் காரணமாக 42 புற்றுநோய் மருந்துகளை உள்ளடக்கிய 390 பிராண்ட் மருந்துகளின் விலை 87 சதவீதம் வரை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. மக்களுக்கு பயன்படக்கூடிய அத்தியாவசிய மருந்துகள் பல, அத்தியாவசிய மருந்துகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு விலை குறைக்கப்பட்டுள்ளன. இதுபோல், இதய நோய்க்கான ஸ்டென்ட் விலை 80 சதவீதம் வரை குறைக்கப்பட்டது. உயிர்காக்கும் மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, புற்றுநோய்க்கு பயன்படும் மருந்துகள் விலை குறைக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (என்பிபிஏ) கட்டுப்படுத்தியுள்ளது. 42 புற்றுநோய் மருந்துகளின் லாப உச்சவரம்பை இந்த ஆணையம் 30 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது. இது கடந்த 8ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம், 72 வகையான பார்முலாக்களில் தயாரிக்கப்பட்ட 355 மருந்து பிராண்டுகளின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதில் 45 பிராண்ட் மருந்துகளின் விலை 25 சதவீதம் வரையிலும், 43 பிராண்ட் மருந்துகள் 25 சதவீதம் முதல் 50 சதவீதம், 12 பிராண்டுகள் 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை, 5 பிராண்டுகள் 70 சதவீதத்துக்கு மேல் விலை குறையும் என மருந்து உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறினர்.

 இந்த சூழ்நிலையில், மேற்கண்ட 42 மருந்துகள் மற்றும் 72 பார்முலாக்கள் அடங்கிய 390 மருந்துகள் குறைந்துள்ளது என தெரிய வந்துள்ளது. இவற்றின் விலை 87 சதவீதம் வரை குறைந்துள்ளதாகவும், இதனால் நோயாளிகளின் மாதாந்திர மருத்துவ செலவு பெருமளவு குறையும் எனவும் மருந்து விற்பனையாளர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு நிறுவன ஆய்வின்படி, இந்த நடவடிக்கையால் கெமிஸ்ட் மற்றும் மருந்து மொத்த விற்பனையாளர்களின் லாபம் ஆண்டுக்கு ரூ.800 கோடி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புற்றுநோய் மருந்துகளுக்கு விலை உச்சவரம்பை நிர்ணயிப்பது தொடர்பான செயல்பாடுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் துவக்கியது. பிப்ரவரி 27ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, மார்ச் 8ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lapse , cancer medicine,
× RELATED .சூலூர் இடைத்தேர்தல் அரசு ஊழியர்களுக்கு இன்று முதற்கட்ட பயிற்சி