உடுமலை: அமராவதி வனப்பகுதியில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஊடுருவிய 10 பேர் கும்பலை பிடிக்க நக்சல் ஒழிப்பு மற்றும் அதிவிரைவு படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, அமராவதி ஆகிய இரு வனச்சரகங்கள் உள்ளன. உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சாலையில், இடதுபுறம் உள்ள அமராவதி வனச்சரகம் 172.5 சதுர கிமீ பரப்பளவும், வலதுபுறம் உள்ள உடுமலை வனச்சரகம் 290 சதுர கிமீ பரப்பளவும் கொண்டவை. இரு வனசரகத்திற்குட்பட்ட எல்லைப்பகுதிகளில் 20 செட்டில்மென்ட் பகுதிகளில் மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், வனத்துறையினரின் அறிவுறுத்தலின்பேரில் வனஊழியர்கள் கடந்த 15 நாளாக தேனாறு பகுதியில் தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று முன்தினம் மதியம் வனஊழியர் சின்ராஜ் தேனாற்றில் குளித்து கொண்டிருந்தபோது ஆற்றின் மறுகரையான அணைக்கல்பட்டியில் 10 பேர் கும்பல் நின்று கொண்டிருந்தது. கத்தி, அரிவாளுடன் நின்ற அந்த கும்பலில் 4 பேர் பெரிய பைகள் வைத்திருந்தனர். அவர்களில் ஒருவர் சின்ராஜை அழைத்து இந்த வனப்பகுதியில் எத்தனை குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்கின்றனரா, அடிப்படை வசதி செய்து கொடுத்துள்ளனரா, போலீசார் இங்கு ரோந்து மேற்கொள்வார்களா என பல கேள்வி கேட்டுள்ளார்.
இதனால், அதிர்ச்சி அடைந்த சின்ராஜ் பயத்தில் தேனாறுக்கு ஓடினார். மாலை 6 மணி அளவில் சக ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அமராவதி வனவர் சுப்ரமணி தலைமையில் வனத்துறையினர், சம்மந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாட்டுப்பட்டி என்ற மலைவாழ் பகுதிக்கு 10 பேர் கும்பல் வந்ததாகவும், வீட்டில் இருந்த ஒரு சிலரிடம் ரேஷன் அரிசி மற்றும் கருவாடுகளை வாங்கி சென்றதாகவும் மக்கள் கூறினர். இதன்பேரில், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அனைத்து வனச்சரகங்களும் உஷார்படுத்தப்பட்டன. நேற்று காலை அமராவதி மற்றும் உடுமலை வனச்சரகத்தில் இருந்து தலா 15 பேர் கொண்ட 3 குழுவினர் வனத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அடிவாரத்தில் கல்லாபுரம் சுற்று பகுதியில் 10 பேர் கொண்ட குழுவினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதுதவிர, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், ஆயுதப்படை போலீசார் என 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து வரைவண்டி, பாறைதுறை, குதிரையாறு ஆகிய பகுதிகளில் வனத்துக்குள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
