×

தீவிரவாதிகள் நடத்தும் தாக்குதல்களை வாழ்நாள் முழுவதும் பொறுக்க முடியாது: பிரதமர் மோடி ஆவேசம்

காஜியாபாத்: தீவிரவாதத்தால் இந்தியாஅனுபவித்த துன்பங்கள் போதும். வாழ்நாள் முழுவதும் தீவிரவாத தாக்குதலை பொறுத்துக் கொள்ள மாட்டோம்’ என்று தீவிரவாதிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் எச்சரிக்கை விடுத்தார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய தொழிற்பிரிவு  பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்)  கடந்த 1969ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 50 ஆண்டுகள்  நிறைவடைகிறது. உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் சிஐஎஸ்எப் உருவாக்கப்பட்ட பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுபேசியதாவது: புல்வாமா, உரி போன்ற  தீவிரவாத தாக்குதல்களால்  நாடு பாதிக்கப்பட்டது போதும், வாழ்நாள் முழுவதும் தீவிரவாத தாக்குதல்களை பொறுத்து கொள்ள மாட்டோம். அண்டை நாடு நம்முடன் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. ஆனாலும், நம்முடன் போர் புரியும் அளவுக்கு அவர்கள் திறமை இல்லாதவர்கள். உள்நாட்டில் இருந்து அண்டை நாட்டிற்கு எல்லை கடந்து ஆதரவு அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் சதி திட்டமும் வகுக்கப்படுகிறது. இது போன்ற தருணங்களில் நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் சிஐஎஸ்எப் போன்ற  துணை ராணுவத்தினரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆனால், அண்மையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை பார்த்தால், இதுபோன்ற கடினமான நேரங்களில் நாடு, அரசு அமைப்புகளை பாதுகாப்பது சவாலான விஷயமாக உள்ளது. அதனால், வேறு வழியின்றி அரசு தாக்குதல் நடத்தும் உறுதியான முடிவு எடுக்க வேண்டியுள்ளது.

சிஐஎஸ்எப் பிரிவினர் அணுமின் நிலையங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்உற்பத்தி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட முக்கிய பொது, தனியார் துறைகளில் பாதுகாப்புப் பணியை  மேற்கொண்டு வருகின்றனர். தனி மனிதனுக்கு பாது காப்பு அளிப் பது எளிமையானது. அதேசமயம் நாளொன்றுக்கு 30 லட்சம் பேர் வந்து போகும், 8 லட்சம் பேர் பயணிக்கும் மெட்ரோ ரயில் நிலையம் போன்ற இடத்துக்கு பாதுகாப்பு வழங்குவது என்பது எளிதான காரியமல்ல. இங்கெல்லாம் நுழைவாயிலில் மட்டும் நீங்கள் நிற்கவில்லை. நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கிறீர்கள். தற்போது, சிஐஎஸ்எப்.பில் சேர பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மகள்களை வரவேற்கிறேன். சீருடையில் நாட்டுக்கு பணியாற்ற அவர்களை அனுப்பி வைக்கும் பெற்றோர்கள் அதிலும் குறிப்பாக தாய்மார்களுக்கு வாழ்த்துகள். சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாட்டுக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த 35 ஆயிரம் போலீசாரில் 4 ஆயிரம் பேர் துணை ராணுவப் படையை சேர்ந்தவர்கள் என குறி ப்பிட விரும்புகிறேன். இவ்வாறு மோடி பேசினார்.

நான் ஒழுக்கமானவன்
நிகழ்ச்சியில் மோடி மேலும் பேசுகையில், ‘‘விஐபி.க்கு பாதுகாப்பு அளிப்பதில் உங்களுக்கு (சிஐஎஸ்எப்) சிரமங்கள் ஏற்படும். விஐபி கலாசாரம் சில நேரங்களில் உங்கள் பாதுகாப்பு பணிக்கு இடையூறு ஏற்படுத்தி விடுகிறது. நான் ஒழுக்கத்தை கடைபிடிப்பவன். பதவியை பின் தொடர்பவன் அல்ல. அதேபோன்று ஒவ்வொரு குடிமகனும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், உங்களது பணி கடினமானதாகி விடும். எப்படி ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை மக்களுக்கு நீங்கள் கற்றுத்தர வேண்டும்’’ என்றார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Attacks ,terrorists ,Narendra Modi , Terrorist attack, Modi, Prime Minister Narendra Modi
× RELATED 2 நாள் பயணமாக பூட்டான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!!