×

தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெண் ஆய்வாளர் பணியிட மாற்றம்

தாம்பரம்: தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் நிலை ஒன்று ஆய்வாளர் தினகரன் செய்தி எதிரொலி காரணமாக திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டார். மேற்கு தாம்பரம், கிஷ்கிந்தா பிரதான சாலையில் இயங்கி வரும் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆர்டிஓ துரை, நிலை ஒன்று ஆய்வாளர் செல்வி, நிலை இரண்டு ஆய்வாளர் ஸ்ரீநிவாஸ் உட்பட அனைத்து  ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தனித்தனியாக புரோக்கர்களை வைத்துக்கொண்டு வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக தெரிகிறது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் பொதுமக்கள் புகார் அளித்தும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தி கடந்த 26ம் தேதி, ‘‘தினகரன்’’ நாளிதழிலும் வெளியானது.இதன் எதிரொலியாக, கடந்த 26ம் தேதி காலை 10 மணியளவில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இணை போக்குவரத்து ஆணையர் மனகுமார் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஓட்டுநர் பயிற்சி  மைய உரிமையாளர்கள் அவரிடம் சரமாரியாக புகார் அளித்தனர்.

பின்னர், இணை போக்குவரத்து ஆணையர் மாலை 5:30 மணி வரை அலுவலகத்தில் ஆய்வு செய்துவிட்டு அங்கிருந்த ஆவணங்களையும் கொண்டு சென்றார். இந்நிலையில் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிலை  ஒன்று ஆய்வாளராக இருந்த செல்வி அம்பத்தூர் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.தற்போது இவருக்கு பதிலாக ஓசூர் பகுதியில் இருந்து நாகராஜ் என்பவர் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நிலை ஒன்று ஆய்வாளராக மாற்றலாகி வந்துள்ளார்.

லஞ்சம் தலைவிரித்து ஆடும் அபாயம்  
தற்போது நிலை ஒன்று ஆய்வாளராக வந்துள்ள நாகராஜும், தற்போது ஆர்டிஓவாக உள்ள துரையும் ஒரே பேட்ச்  என்றும், இருவரும் 7.12.2000ல் பணிக்கு சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.நாகராஜ் மீது பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளதால் ஆர்டிஓவாக பதவி உயர்வு பெறாமல் நிலை ஒன்று ஆய்வாளராக இருப்பதாகவும், தற்போது ஆர்டிஓவாக உள்ள துரையுடன் இவரும் சேர்ந்தால் தாம்பரம் வட்டார  போக்குவரத்து அலுவலகத்தில் மீண்டும் லஞ்சம் தலைவிரித்து ஆடும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை என்றும் ஓட்டுநர் பயிற்சி மைய உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women's Inspectorate ,Tambaram Regional Transport Office , Tambaram , regional transport, change
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...