×

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எதிரொலி தலைமை செயலகத்தில் முதல்வர் படம் அகற்றம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தலைமை செயலகத்தில் வைக்கப்பட்ட முதல்வர் படம் அகற்றப்பட்டது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுகிறது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அராரோ தேர்தல் தேதி அறிவிப்பை நேற்று வெளியிட்டார். இதைதொடர்ந்து உடனடியாக நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து, நேற்று மாலை 5 மணி முதல் மத்திய, மாநில அமைச்சர்கள் பயன்படுத்தி வந்த சுழல் விளக்குகள் பொருத்தப்பட்ட அரசு  வாகனங்கள் மற்றும் தேசிய கொடிகளை பயன்படுத்த தடை அமலுக்கு வந்தது. அதை ெதாடர்ந்து அமைச்சர்கள் அவர்களது வாகனங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள பல்வேறு துறை அலுவலகங்கள் மற்றும் அமைச்சர் அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்கள் அகற்றப்பட்டது. அதே போன்று மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள் உட்பட பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முதல்வர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படங்கள் அகற்றப்பட்டது. மேலும், தேர்தல் தேதி அறிவிப்பிற்கு பிறகு டெண்டர் அறிவிப்பு வெளியிடவும் நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பொது பயணிகள் விமானத்தில் சென்ற நிர்மலா சீதாராமன்
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று தனி விமானத்தில் சென்னை வந்தார். இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர், தனி விமானத்தில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவர் பொது பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். மேலும், அவர் பயன்படுத்திய காரும் உடனடியாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister ,election announcement , parliamentary election
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...