×

புறப்பட்ட 6வது நிமிடத்தில் விமானம் விழுந்து நொறுங்கி 157 பயணிகள் பரிதாப பலி: எத்தியோப்பியாவில் பயங்கரம்

நைரோபி: எத்தியோப்பியாவில் இருந்து புறப்பட்ட போயிங் விமானம், அடுத்த சில நிமிடங்களில் கீழே விழுந்து பயங்கர விபத்துக்குள்ளானதில் 157 பயணிகள் பரிதாபமாக பலியாகினர். ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபா. இங்குள்ள போல் விமான நிலையத்தில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கி எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் போயிங் விமானம் இடி-302, நேற்று காலை  புறப்பட்டது. அதில், 149 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட 6வது நிமிடத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.அடுத்த சில நிமிடத்திலேயே, அந்த விமானம் அட்டிஸ் அபாபாவின் அருகில் உள்ள பிஷோப்து பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்தது. மேலும், விமானத்தில் பயணம்  செய்த 157 பயணிகளில் யாருமே உயிர் பிழைக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலையும் உறுதி செய்தது.

இந்த விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணம் என எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. விபத்து தகவலை அறிந்ததும், உறவினர்களை வரவேற்க நைரோபி விமான நிலையத்தில் காத்திருந்த மக்கள்  சோகத்தில் கதறி அழுதனர். 2010ம் ஆண்டுக்குப் பிறகு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் சந்திக்கும் மிகப்பெரிய விபத்து இது. இந்தியர்கள் 4 பேர் பலி: விபத்தில் இறந்த 157 பேரில் கென்யாவை சேர்ந்தவர்கள் 32 பேர். எத்தியோப்பியாவை சேர்ந்தவர்கள் 9 பேர். கனடா 18, சீனா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த தலா 8 பேர்,  பிரான்ஸ், பிரிட்டனை சேர்ந்த  தலா 7 பேர், எகிப்து 6, நெதர்லாந்து, இந்தியா மற்றும் சுலோவாக்கியாவை சேர்ந்த தலா 4 பேரும் இறந்துள்ளனர்.

போயிங் 737 மேக்ஸ் ஆபத்தானதா?
இதற்கு முன், கடந்த அக்டோபர் 29ம் தேதி இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட லயன் ஏர் போயிங் 737 மேக்ஸ் விமானம் அடுத்த சில நிமிடங்களில் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் 189  பயணிகள் இறந்தனர். இதேபோல, எத்தியோப்பியன் ஏர்லைன்சின் போயிங் 737 மேக்ஸ் விமானம் புறப்பட்ட சில நிமிடத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில் சிக்கிய விமானம் புதிதாக  வாங்கப்பட்டதாகும். சர்வதேச அளவில் பயணிகள் விமானத்தில் அதிகளவில் விற்கப்படும் விமானமான போயிங் 737 மேக்ஸ், அடுத்தடுத்து 2 பெரிய விபத்துகளை சந்தித்திருப்பதும் விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தை உலகின் 67 ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : passengers ,Terror ,Ethiopia , Depart, plane, crashes down, 157 passengers
× RELATED செங்கல்பட்டு புறவழிச்சாலையில் லாரி...