×

பிஎன்பி பாரிபா ஓபன் 3வது சுற்றில் குணேஸ்வரன்: பிளிஸ்கோவா முன்னேற்றம்

இண்டியன் வெல்ஸ்: பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் தகுதி பெற்றார்.அமெரிக்காவில் நடைபெறும் இந்த தொடரின் தகுதிச் சுற்று ஆட்டங்களில் அபாரமாக வென்று பிரதான சுற்றுக்கு முன்னேறிய குணேஸ்வரன் (29 வயது, 97வது ரேங்க்), 2வது சுற்றில் உலகின் 18வது ரேங்க் வீரர் நிகோலஸ்  பாசிலாஷ்விலியுடன் (ஜார்ஜியா) மோதினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை வசப்படுத்தி முன்னிலை பெற்றார்கடும் இழுபறியாக அமைந்த 2வது செட்டில் பாசிலாஷ்விலி 7-6 (8-6) என டை பிரேக்கரில் வென்று 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. இரு வீரர்களும்  சளைக்காமல் புள்ளிகளைக் குவித்து முன்னேற, இந்த செட்டும் டை பிரேக்கருக்கு சென்றது. இதில் கடுமையாகப் போராடிய குணேஸ்வரன் 6-4, 6-7 (6-8), 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.  இப்போட்டி 2 மணி, 31 நிமிடத்துக்கு நீடித்தது. குணேஸ்வரன் சென்னையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி வீரர்கள் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), பிலிப் கோல்ஸ்கிரைபர் (ஜெர்மனி), கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), டொமினிக் தியம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி), மிலோஸ் ரயோனிச் (கனடா)  ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - டெனிஸ் ஷபோவலாவ் (கனடா) ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் ஜேமி மர்ரே - புரூனோ சோரஸ் (பிரேசில்) ஜோடியை  வீழ்த்தியது.
மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றுள்ளார். 2வது சுற்றில் ஜப்பானின் மிசாகி டோயுடன் மோதிய பிளிஸ்கோவா முதல் செட்டில் 6-7 (4-7) என்ற கணக்கில்  தோற்று பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடிய அவர் 6-1, 6-1 என அடுத்த 2 செட்களையும் எளிதாக கைப்பற்றி வெற்றியை வசப்படுத்தினார்.முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா (ஜப்பான்), பெலிண்டா பென்சிக் (சுவிஸ்), அனெட் கோன்டாவெய்ட் (எஸ்டோனியா), அனஸ்டேசியா செவஸ்டோவா (லாட்வியா) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.  அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் பெத்ரா குவித்தோவாவை வீழ்த்தினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gunasewaran ,round ,BNP Paribas Open , BNB ,Paribu Open, Guneswaran , Progress ,Blisscova
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் கார்சியா