×

ஷிகர் தவான் சதம் வீண் மொகாலியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி: டர்னர் அதிரடி திருப்புமுனையானது!

மொகாலி: இந்திய அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற ஆஸ்திரேலியா 2-2 என சமனிலை ஏற்படுத்தியது. பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். எம்.எஸ்.டோனி, அம்பாதி ராயுடு, முகமது ஷமி,  ஜடேஜாவுக்கு பதிலாக கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட், புவனேஷ்வர், சாஹல் இடம் பெற்றனர்.தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். அபாரமாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 31 ஓவரில் 193 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். ஒருநாள் போட்டிகளில் தவான் தனது  16வது சதத்தை பதிவு செய்தார். ரோகித் 95 ரன் (92 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஜை ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஹேண்ட்ஸ்கோம்ப் வசம் பிடிபட்டார்.அடுத்து தவானுடன் கே.எல்.ராகுல் இணைந்தார். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்தனர். தவான் 143 ரன் (115 பந்து, 18 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் கிளீன் போல்டானார். கேப்டன் விராத்  கோஹ்லி 7 ரன், ராகுல் 26 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ரிஷப் பன்ட் 36 ரன் (24 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), கேதார் ஜாதவ் 10 ரன் எடுத்து வெளியேற, புவனேஷ்வர் குமார் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய விஜய் ஷங்கர் 26 ரன் (15 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கம்மின்ஸ் வேகத்தில் மேக்ஸ்வெல் வசம் பிடிபட்டார். சாஹல் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார். கடைசி  பந்தை சந்தித்த பூம்ரா சிக்சருக்கு தூக்கி அசத்த, இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன் குவித்தது. குல்தீப் 1 ரன், பூம்ரா 6 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸ்திரேலிய பந்துவீச்சில் கம்மின்ஸ் 5, ரிச்சர்ட்சன் 3, ஸம்பா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 359 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. கேப்டன் ஆரோன்  பிஞ்ச், உஸ்மான் கவாஜா இருவரும் துரத்தலை தொடங்கினர். புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரிலேயே பிஞ்ச் டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த ஷான் மார்ஷ் 6 ரன் எடுத்து பூம்ரா வேகத்தில் கிளீன் போல்டாக,  ஆஸி. அணி 12 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறியது.
இந்த நிலையில், கவாஜா - ஹேண்ட்ஸ்கோம்ப் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் 3வது விக்கெட்டுக்கு 192 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். கவாஜா 91 ரன் (99 பந்து, 7 பவுண்டரி)  விளாசி, பூம்ரா வேகத்தில் குல்தீப் வசம் பிடிபட்டார். அடுத்து ஹேண்ட்ஸ்கோம்ப் உடன் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் இணைந்தார். மேக்ஸ்வெல் 23 ரன் எடுத்து குல்தீப் சுழலில் வெளியேற, சதம் விளாசிய  ஹேண்ட்ஸ்கோம்ப் 117 ரன் (105 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி சாஹல் பந்துவீச்சில் ராகுலிடம் பிடிபட்டார்.

கடைசி கட்டத்தில் ஆஷ்டன் டர்னர் அதிரடியில் இறங்க, ஆட்டம் விறுவிறுப்பானது. டர்னர் - அலெக்ஸ் கேரி ஜோடி 6வது விக்கெட்டுக்கு 86 ரன் சேர்க்க, ஆட்டம் ஆஸி. கட்டுப்பாட்டுக்குள் வந்தது. டர்னர் 33 பந்தில் அரை சதம்  அடித்தார். கேரி 21 ரன் (15 பந்து, 2 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 47.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன் எடுத்து அபாரமாக வென்றது. டர்னர் 84 ரன் (43 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்), ரிச்சர்ட்சன் (0)  ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் பூம்ரா 3, புவனேஷ்வர், குல்தீப், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.டர்னர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இரு அணிகளும் 2-2 என சமநிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி போட்டி டெல்லியில் 13ம் தேதி நடைபெறுகிறது.

டோனியை முந்தினார் ரோகித்
மொகாலியில் நேற்று நடந்த 4வது ஒருநாள் போட்டியில் 2 சிக்சர்களை விளாசிய ரோகித் ஷர்மா, ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் எம்.எஸ்.டோனியை பின்னுக்குத் தள்ளி  முதலிடத்தை பிடித்தார். அவர் இதுவரை 218 சிக்சர் அடித்துள்ளார். டோனி (217 சிக்சர்), சச்சின் டெண்டுல்கர் (195), சவுரவ் கங்குலி (189), யுவராஜ் சிங் (153) அடுத்த இடங்களில் உள்ளனர்.

ரோகித் - தவான் சாதனை
ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த இந்திய தொடக்க ஜோடிகள் பட்டியலில் ரோகித் - தவான் இணை 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. நேற்று 12 ரன் எடுத்தபோது இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 4,389 ரன் சேர்த்து  சச்சின் - சேவக் ஜோடியின் சாதனையை (4,388 ரன்) முறியடித்தனர். இந்த வரிசையில் சச்சின் - கங்குலி இணை 8,227 ரன் குவித்து முதல் இடத்தில் உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Shikhar Dhawan ,victory ,Australia ,Turner , Shikhar Dhawan's,Australia, Mogali, Turner's turning point
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...