×

ஊழல் வழக்கு விசாரணை மிரட்டலுக்கு மட்டும் தான்: ஜெ.அன்பழகன், திமுக எம்எல்ஏ

வருமான வரித்துறை சோதனை நடத்தியது இந்த ஆட்சிக்கு எதிராக அல்ல. இந்த ஆட்சியாளர்களை மிரட்டி பணிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வருமான வரித்துறை சோதனையை நடத்தியிருக்கிறார்கள்.  மத்தியில் உள்ளவர்கள் கூட்டணியில் சேர வேண்டும், இந்த அரசு இவர்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்பதற்காக சோதனை நடத்தப்பட்டது. மிரட்டி தான் கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளனர்.  மத்திய அரசு, வருமானவரி, சிபிஐ, நீதிமன்றம் எல்லாவற்றிலும் தலையிடுகிறது. வருமான வரித்துறை சோதனை நடத்துவது மட்டுமல்ல, குட்கா விவகாரத்தில்  மாதவராவிடம் வாக்குமூலம் பெறப்பட்டு சிபிஐ மூலம் வழக்கு பதிவு ெசய்யப்பட்டு, அந்த வழக்கு தற்போது கிடப்பில் உள்ளது. அந்த வழக்கின் பேரில் விசாரணை பெயரளவிற்கு மட்டுமே நடக்கிறது.
இப்போதுள்ள டிஜிபியை விசாரிக்கவில்லை. இந்த விவகாரம் விசாரணையோடு நிற்கிறது. அதற்கு அடுத்த கட்டத்திற்கு செல்லவில்ைல. காரணம் தேர்தலில் கூட்டணி வைக்கவும், சொல்வதை கேட்க வேண்டும் என்பதற்காக,  அப்படியே வைத்துள்ளனர். கூட்டணி வைக்கவில்லை என்றால், வழக்கு போட்டு கோர்ட்டில் நிற்க வைத்து விடுவேன் என்று மத்தியில் இருப்பவர்கள் மிரட்டிதான் அவர்கள் கூட்டணியில் சேர்ந்துள்ளார்கள்.

வருமான வரித்துறை தனது சோதனையை முடித்து கணக்குகளை தாக்கல் செய்து விடுவார்கள். குறிப்பாக, பணமதிப்பிழப்பு நேரத்தில் சேகர் ரெட்டி வீட்டில் ₹100 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது வழக்கு  பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சில நாட்களில் அவர் வெளியே வந்து விட்டார். அதன்பிறகு அந்த வழக்கு என்ன நிலையில் இருக்கிறது என்பது தெரியாது. சோதனை விவரங்களை கையில் வைத்து கொண்டு மிரட்டி  வருகின்றனர்.  சுப்ரீம் கோர்ட் குட்கா விற்பனை செய்ய லஞ்சம் பெற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேணடும் என்று உத்தரவிட்டது. ஆனால், அவர்கள், விசாரணை வளையத்தை விட்டு வெளியில் வர மறுக்கின்றனர். அவர்கள்,  வாக்குமூலம் அளித்தவர்களிடம் மீண்டும், மீண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அதை தாண்டி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். சிபிஐ, வருமான வரித்துறை மத்திய அரசுக்கு கட்டுப்படாத தன்னிச்சையான அமைப்பு ஆகும். ஆனால், அந்த அமைப்பையே அவர்கள் கையில் வைத்து கொண்டு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கின்றனர்.  ஆட்சி மாற்றம் ஏற்படும் பட்சத்தில் வருமான வரித்துறை, சிபிஐ சுதந்திரமாக செயல்படும்.

அப்படி நடக்கும் பட்சத்தில் சோதனையில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை பாயும். காங்கிரஸ் ஆட்சியில் ஜனநாயகத்திற்கு உயிர்  இருந்தது. இந்த ஆட்சியில் அது கிடையாது. எதிலெல்லாம் தலையிடக்கூடாதோ அதில் எல்லாம் மத்தியில் இருப்பவர்கள் தலையிட்டனர்.  ஜனநாயக அமைப்பை இந்த அரசு சுக்குநூறாக உடைத்து விட்டது. தமிழகத்தில் காலூன்ற வழியில்லாமல், தன்னிச்சையான அமைப்பை வைத்து மிரட்டி ஆதரிக்க வைக்கின்றனர்.கூட்டணி வைக்கவில்லை என்றால், வழக்கு போட்டு கோர்ட்டில் நிற்க வைத்து விடுவேன் என்று மத்தியில் இருப்பவர்கள் மிரட்டிதான் அவர்கள் கூட்டணியில் சேர்ந்துள்ளார்கள்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : corruption scandal ,MLA ,DMK ,J. Anbanjan , Scam trial, intimidation, J. Anbanjan, DMK MLA
× RELATED தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தோல்வியை...