×

நாட்டை காக்கும் வீரர்களின் குடும்பத்திற்கு குடிக்க குடிநீர் இல்லை

* புதுக்கோட்டை அருகே பரிதாபம்

புதுக்கோட்டை :  தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி யூனியனை சேர்ந்தது மேலக்கூட்டுடன்காடு கிராமம். இங்கு சுமார் ஆயிரத்து ஐநூறு வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலனோர் ராணுவத்தில் பணியாற்றி நாட்டிற்கு சேவை செய்து வருவதால் அவர்களின் குடுபத்தினர் இங்கு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு  தேவையான குடிநீர் அப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு போர்வெல்களில் இருந்து தெருக்குழாய்கள் மூலம் நேரிடையாக சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டத்தில் போதுமான அளவு மழை பெய்யாததால் நீர் மட்டம் குறைந்து இப் பகுதியில் நிலத்தடி நீர் அதல பாதளத்திற்கு சென்றுவிட்டது. இதனால் பல 100 அடிகள் ஆழ்குழாய் அமைத்தால் தான் தண்ணீர் கிடைக்கும் சூழ்நிலை உள்ளது.

நிலத்தடி நீர் மட்டம் கீழே சென்றதால் அதிக ஆழத்தில் உள்ள தண்ணீர் மிகவும் கடினத் தன்மையடைந்து பொது மக்கள் குடிப்பதற்கு லாயக்கற்றதாக மாறி உள்ளது. இது தவிர நீரில் சுண்ணாம்பு சத்து அதிக அளவில் காணப்படுவதால் இந்தக் குடிநீரை குடிக்கும் பொது மக்களுக்கு கல் அடைப்பு, சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட உயிர்க் கொல்லி நோய்கள் ஏற்பட்டு ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கு பலர் இந்த கிராமங்களில் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட இந்த மக்கள் முறையிட எம்எல்ஏவும் இல்லை, உள்ளாட்சி பிரதிநிதிகளும் இல்லை. ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த நிலையில் அவரது எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டு விட்டது.

இதனால் எம்எல்ஏ இல்லாத தொகுதியாக உள்ளது. அதே நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தியிருந்தால் பஞ்சாயத்து தலைவரிடம் முறையிட்டிருக்கலாம். அதற்கும் வழியில்லாமல் போய் விட்டது. இதனால் குடிநீர் பிரச்னை இந்த பகுதிகளில் தலைவிரித்தாடுகிறது. அப் பகுதியில் வசித்து வரும் துர்காதேவி என்ற பெண்மணி கூறியதாவது. எங்கள் ஊரில் இதுவரை கிட்னி பாதிப்பில் 12பேர் வரை இறந்துள்ளனர். எங்கள் ஊர் ஆண்கள் ராணுவத்திலும், போலீசிலும் பணியாற்றுவதால் வெளியூரில் வசித்து வருகின்றனர். நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் வசித்து வருகிறோம். நாங்கள்தான் எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு.

ஆனால் அடிப்படை தேவையான குடிநீரே எங்களுக்கு பாதுகாப்பற்றதாக உள்ளது. எங்கள் ஊரில் போர் வெல்லில் இருந்து நேரிடையாக எடுத்து பைப் லைன் வழியாக தண்ணீர் விடுவதால் தண்ணீர் சுகாதாரமற்றதாக காணப்படுகிறது. எங்களுக்கென்று மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி எதுவும் கிடையாது. தண்ணீரில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால் கல்அடைப்பு, சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட நோய்கள் வருகின்றன. எங்கள் ஊருக்கு ஆற்று குடிநீர்ர் வரப்போகிறது என்று கூறி மங்களகிரி விலக்கு பக்கத்தில் ஒரு சம்பு ஓன்று அமைத்து சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இது வரை ஆற்று குடிநீர்ர் வந்தபாடில்லை. எங்களுக்கு ஆற்று நீரை குடிநீராக வழங்கினால்தான் எங்கள் ஊரில் நாங்கள் உயிர் வாழ முடியும் என்றார்.

அவர் கூறியது போல் இங்கு ஆற்று குடிநீர் வழங்க திட்டம் போடப்பட்டு அதற்கான பணிகளும் நிறைவடைந்த நிலையில் உள்ளது. ஆனால் இன்று வரை ஆற்று குடிநீர் வழங்காமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இது வரை நகர்ப் புற மக்களுக்கு ஆற்று குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு ஆற்று குடிநீர் வழங்கபடுவதில்லை. இதற்கு காரணம் கிராமங்களில் உள்ள குறைவான மக்கள் தொகை;கு தேவையான குடிநீர் அங்கேயே கிடைக்கும் சூழ்நிலை இருந்து வந்தது. ஆனால் நிலமை இப்போது அவ்வாறில்லை.

தொடர்ந்து ஏமாற்றி வரும் பருமழையினால் கிராமப்பகுதிகளிலும் நிலத்தடி நீர் மட்டம் படிப்படியாக குறைந்து அதிக ஆழத்திற்கு சென்றுவிட்டது. இதனால் நிலத்தடிநீருடன் கடல் நீர் கலந்து தண்ணீர் உப்பு தன்மையை பெறுகிறது. இதனால் கிராமப் பகுதியிலுள்ள நிலத்தடி நீரும் குடிப்பதற்கு லாயக்கற்றதாக மாறி வருகிறது. இதனால் இங்கு வசிக்கும் மக்கள் உப்பு நீரை குடிநீராக பருக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். உப்பு நீரை பருகுவதால் சிறுநீரக பாதிப்பிற்குள்ளாக வேண்டியதுள்ளது.

இது வரை மேலக் கூட்டுடன்காடு கிராமத்தில் இளையபெருமாள் (60), பார்வதி (30), வடிவேல்பிள்ளை (50), மணிப்பாண்டியன் (50), சிவனைந்தான் (40), சங்கரம்பிள்ளை (60), ராமலெட்சுமி, (40), வள்ளியம்மாள் (50), மற்றும் ராமலெட்சுமி (50) ஆகியோர் இறந்துள்ளனர். மேலும், பெருமாள் (40), சுப்புலெட்சுமி (42), சேரந்தையன் (23), திருவேங்கடம் (50), மாரியம்மாள் (35), சங்கரன் (25), சுப்பையா (50) ஆகியோர் சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது. அந்த பகுதிக்கு ஆற்று குடிநீர் வழங்க குடிநீர் வடிகால் வாரியத்திடம் கேட்டுள்ளோம். அவர்களுக்கு விரைவில் ஆற்று குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : country , Pudukkottai,drinking water,ArmyMan
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!