×

நாள்தோறும் கடல் சீற்றம், மணல் அரிப்பு கடல் அலைகளுடன் தினமும் போராடும் மீனவர்கள்

* கண்டு கொள்ளப்படாத பெரியதாழை கிராமம்

சாத்தான்குளம் : பெரியதாழை மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது. நிதி ஒதுக்கி பணிகள் துவங்காததால் கடல் சீற்றம் அதிகரிப்பதுடன் கரையில்  அரிப்பும் தொடர்கதையாக மாறி வருகிறது.  சாத்தான்குளம் வட்டம், பெரியதாழை மிகப் பெரிய கடற்கரை கிராமமாக உள்ளது. இந்த கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடித் தொழிலுக்கு சென்று திரும்புகின்றனர். இந்த மீன் பிடித்தொழிலை நம்பி 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். பெரியதாழை கடலில் கடல் அரிப்பு ஏற்பட்டு மீனவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதையடுத்து மீனவர்களின் கோரிக்கை ஏற்று கடந்த 2003ஆம் ஆண்டு ரூ.6 கோடி மதிப்பில் சுமார் 800 மீட்டர் தொலைவில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. ஆனாலும் மீதமுள்ள பகுதியில் கடல்  சீற்றம் ஏற்பட்டு மீனவர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி வந்தது. இதையடுத்து மீனவர்கள் பாதிப்பு ஏற்படும் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு  அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பெரியதாழையில் ஜி 1 என்ற பெயரில் 800 மீட்டரும், ஜி 2என்ற பெயரில் 200 மீட்டரும், ஜி 3 பெயரில்  75 மீட்டர், ஜி 4 என்ற  பெயரில்  50 மீட்டர் தொலைவில் தூண்டில் வளைவு அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கு மீனவர்கள் எதிர்ப்பு  தெரிவித்ததையடுத்து  ரூ.25 கோடி மதிப்பில் 800 மற்றும் 200 மீட்டர் தொலைவில்  மேற்கு மற்றும் கிழக்கில் இரு தூண்டில் வளைவு அமைக்கப்பட்டது. 200 மீட்டர் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவில் 900 மீட்டர் இடைவெளி உள்ளது. இந்த  குறைவாக அமைக்கப்பட்ட பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து கரையில் படகுகளை நிறுத்த முடியாத  அளவிற்கு மணல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் நிறுத்தப்பட்ட படகுகளும் சேதமடைந்து வருகிறது.

மேலும் கடலுக்கும், குடியிருப்பு வீடுகளுக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவர்களும் உடைந்து  விழுந்துள்ளது. இதனால் கடல் சீற்றம் காரணமாக குடியிருப்பு பகுதியில் கடல் நீர் புகுந்து சேதம் ஏற்படுத்தும் நிலை உருவாகி வருகிறது. இதனால் மீனவர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக பெரியதாழை மீணவ பிரதிநிதிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரை நேரடியாக சந்தித்து கடல் சீற்றத்தை தடுக்கும் வகையில் தூண்டில் வளைவு அமைக்கப்படாத 900 மீட்டர் இடைவெளி பகுதியில் கடல் சீற்றம் அதிகரித்து தொழிலுக்க போக முடியாத நிலை உள்ளது. எனவே அப்பகுதியில் கூடுதலாக தூண்டில் வளைவு பாலம் அமைத்து தர வேண்டும் என முறையிட்டனர்.

அதன்பேரில் சென்னை இந்திய தொழில் வளர்ச்சி கழக அதிகாரிகள் பெரியதாழை கடல் பகுதியை ஆய்வு செய்து திட்ட மதிப்பீடு தயார் செய்தனர். அதன்படி பெரியதாழையில் தூண்டில் வளைவு அமைக்கவும், மீன் பிடி இறங்கும் தளம் அமைக்கவும் ரூ 54 கோடி ஆகும் என திட்டமதிப்பீடு தயார் செய்தனர். ஆனல் இந்த திட்ட மதிப்பீடு தயார் செய்து 6மாதங்களுக்கு மேலாகியும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

alignment=


ஆதலால் நிதி ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகளை தொடங்க வலியுறுத்தி பெரியதாழை மீனவர்கள் கடந்த மாதம் வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை அரசு கண்டு கொள்ளாமல் இருந்து விட்டது. இதனால் பெரியதாழை மீனவர்கள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து பெரியதாழை முன்னாள் ஊராட்சித் தலைவர் மனோகரன் கூறுகையில், முன்னாள் எம்எல்ஏ நீலமேகவர்ணம் காலத்தில் 800 மீட்டர் தொலைவு தூண்டில் வளைவும், தற்போது சண்முகநாதன் எம்எல்ஏ முயற்சி யில் 800, மற்றும் 200 அளவில் தூண்டில் வளைவும்  அமைக்கப்பட்டுள்ளது.

200 மீட்டர் அளவில் அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு  இடையே 900 மீட்டர் இடைவெளி உள்ளது. இந்த  இடைவெளி மூலமாக கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.  இதனால் மீன் பிடி தொழில் பாதிக்கப்படுவதுடன் படகுகளும் சேதமடைகிறது. இதுகுறித்து அரசுக்கு முறையிட்டதன் பேரில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இன்னும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு பணிகள் தொடங்கப்படாமல் முடங்கி காணப்படுகிறது.

alignment=


நாங்களும் 4 ஆண்டுகளாக போராடி வருகிறோம் எந்த முன்னேற்றமும் இல்லை. மேலும் தற்காலிகமாக பணிகள் தொடங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அப்பணிகளும் இன்னும் தொடங்கப்படவில்லை என்றார். இதுகுறித்து பெரியதாழை மீனவர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் கெனிஸ்டன் கூறுகையில் ,  கடல் சீற்றம் காரணமாக பெரியதாழை கடற்கரை பகுதியில் குடியிருப்புக்கும், கடலுக்கும் இடையே உள்ள தடுப்புச்சுவர் உடைந்து விழுந்து வருகிறது.

இதனால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பாதிக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டதன் பேரில் ரூ 1கோடியே 17 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளதாக  தெரிவித்துள்ளார். நிதி ஒதுக்கீடு செய்த கலெக்டருக்கு மீனவர்கள் சார்பில்  நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அப்பணியை தாமதமின்றி உடனடியாக தொடங்க வேண்டும் என்றார்.தினம் தினம் கடல் அலையுடன் போராடும் பெரியதாழை மீனவர்களின் பிரச்னைக்கு விரைவில் நிரந்தர தீர்வு காண வேண்டும். இல்லையெனில் மீனவர்களின் குடியிருப்புகள் மட்டுமின்றி வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகிவிடும்.

கடல் அரிப்பை தடுக்க மணல் மூட்டையாம்

மீனவர்கள் போராட்டம் குறித்து  சாத்தான்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜனிடம் கேட்ட போது, பெரியதாழை  மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைக்க மாவட்ட கலெக்டர்  மூலம் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்போது கடல் அரிப்பை தடுக்க  தற்காலிக பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் சிறப்பு நிதியில் இருந்து  ரூ.1கோடி 17 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதை கொண்டு மணல்  அரிப்பை தடுக்கும் வகையில் மணல் மூட்டை  கொண்டு அடைத்து தர  ஏற்பாடு  செய்யப்பபட்டுள்ளது. மேலும் தடுப்புச்சுவர் எழுப்பிடவும் பணிகள்  மேற்கொள்ளப்பட உள்ளது, என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fishermen , sathankulam ,Sand itching,sea waves,sea waves
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...