×

அமைச்சர் மற்றும் அதிகாரிகள் குளறுபடியால் பசுமை பண்ணை காய்கறி கடைக்கு 5 கோடி நஷ்டம்

* பணம் கொட்டும் பண்ணைகளாக மாறிய கடைகள்
* கல்லா கட்டும் அதிகாரிகள்
* தள்ளாடும் ஊழியர்கள்

சென்னை: அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் குளறுபடியால் பசுமை பண்ணை காய்கறி கடைகளில் மட்டும் 5 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு சார்பில் கூட்டுறவு துறை மூலம் பசுமை பண்ணை காய்கறி கடைகள் (மலிவு விலை காய்கறி கடை) அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. முதல்கட்டமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 54 கடைகள் திறக்கப்பட்டு நல்ல முறையில் செயல்பட்டு வந்தன. ஆனால், வர வர அரசு சார்பில் நடத்தப்பட்டு வந்த மலிவு விலை காய்கறி கடைகளில் விற்கப்படும் காய்கறிகளின் தரம் குறைய தொடங்கியது. கெட்டுப்போன, அழுகிபோன காய்கறி கொள்முதல் செய்தது, தனியார் கடைகளைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அந்த பக்கமே வர மறுத்தனர். ஆனாலும் இந்த கடைகள் இன்று வரை இயங்கி வருகிறது. பசுமை பண்ணை காய்கறி கடை ஆரம்பித்தவுடன் இதில் ஏற்படும் நஷ்டத்தை அரசு மானியமாக வழங்கி வந்தது. காலப்போக்கில் நஷ்டம் இந்த கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் கணக்கில் சேர்க்கப்பட்டு, ஊழியர்கள் பணி ஓய்வின்போது பிடித்தம் செய்யப்பட்ட பிறகுதான் பணி ஓய்வு கொடுக்கப்படுகிறது. இந்த வகையில் 3 கோடி பணம் வசூல் செய்யப்பட வேண்டியுள்ளது. பசுமை பண்ணை காய்கறி கடைகளில் நஷ்டம் ஏற்படுவதற்கு காரணமே கூட்டுறவு துறை அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள்தான். முதலில் ஆரம்பிக்கப்பட்டபோது, விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொள்முதல் செய்யப்பட்டு கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த குளறுபடி முடிவுதான் இந்த பசுமை பண்ணை கடைகளை நஷ்டத்தில் தள்ளி உள்ளது. இந்த கடைகளை மூட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டும், கேட்க மறுக்கிறார்கள்.
இந்த கடைகளை தொடர்ந்து நடத்தினால்தான் அமைச்சர், அதிகாரிகள் கமிஷன் பார்க்க முடியும். 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை அரசு மலிவு விலை காய்கறி கடைகளில் 12 கோடிக்கு காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டது என்றால் அதில் 5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதில் பல கோடி அமைச்சர், அதிகாரிகளுக்கு கமிஷன் என்ற பெயரில் லஞ்சமாக சென்றுள்ளது. 3 கோடி நஷ்டத்தை ஊழியர்கள் தலையில் கட்டியுள்ளார்கள். காஞ்சிபுரம் மொத்த விற்பனை பண்டக சாலை நடத்தும் காய்கறி கடையில் அதிக அளவு ஊழல் நடக்கிறது. அரசு காய்கறி கடைகளில் பணி செய்யாமல் இருக்க அந்த பகுதி சரக மேலாளரிடம் 2 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் போதும். இவரது பெயர் இடம்பெறாது. ரேஷன் கடை ஊழியர்கள்தான் அரசு காய்கறி கடைகளில் பணி அமர்த்தப்படுகிறார்கள். சரக மேலாளர்களை எதிர்த்தால், உடனடியாக காய்கறி கடைக்கு பணிமாற்றம் செய்து பழிவாங்கி விடுவார்கள். மேலும், சரக மேலாளர்கள் நூதன முறையில் கல்லா கட்டுகிறார்கள். ரேஷன் கடை ஊழியர்களிடமே வவுச்சரில் கையொப்பம் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு பணம் தர மாட்டார்கள். எதிர்த்து கேட்டால் பணிமாற்றம் உறுதி. இதற்கெல்லாம் விடிவு காலம் பிறக்க ஒரே வழி, பண்ணை பசுமை காய்கறிகளை அரசே மூட உத்தரவிட வேண்டும் என்கிறார்கள் ரேஷன் கடை ஊழியர்கள்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Minister ,greenhouse vegetable shop , Minister and the officials,threatening the greenhouse vegetable shop ,loss of 5 crores
× RELATED இந்திய பிரதமர் என்ற நிலையில் இருந்து...