×

உரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதிகளுக்கு புரியும் மொழியில் நடத்தப்பட்டதே சர்ஜிக்கல் ஸ்டிரைக்: பிரதமர் மோடி பேச்சு

நொய்டா: ‘‘உரி ராணுவ முகாம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்தான், தீவிரவாதிகளுக்கு புரியும் மொழியில் புகட்டப்பட்ட முதல் பாடம்’’ என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத பயிற்சி மையத்தின் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் ஆதாரம் தரவேண்டும்  என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. நேற்று முன்தினம் காஜியாபாத் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, 130 கோடி மக்கள் வைத்துள்ள நம்பிக்கைதான் இதற்கு ஆதாரம்’ என தெரிவித்தார். இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் நேற்று நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்றார்.

முன்னதாக, குர்ஜா மற்றும் பீகாரின் புஜார் நகரங்களில் 2 அனல் மின்நிலையங்களை தொடங்குவதற்கான அடிக்கல்லை நாட்டினார். மேலும், பண்டிட் தீனதயாள் உபாத்யாயா தொல்பொருள் நிறுவனத்தையும், டெல்லி மெட்ரோவின் புதிய சேவையையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பசியதாவது:  கடந்த 2014ம் ஆண்டில் நான் பிரதமராக வந்த பிறகு புதிய கொள்கைகள், புதிய முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2016ம் ஆண்டு உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்தியா நடத்திய சர்ஜிக்கல் தாக்குதல் தான் தீவிரவாதிகளுக்கு புரியும் மொழியில் முதல்முறையாக புகட்டப்பட்ட பாடமாகும். எதுவும் செய்யாத அரசு உங்களுக்கு  வேண்டுமா? நாட்டின் காவலாளி தூங்குகிறாரா? (பொதுமக்களை பார்த்து கேள்வி எழுப்புகிறார்) உரி தாக்குதலுக்கு பிறகு ஆதாரங்கள் கேட்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களை நமது வீரர்கள் முன்பு எப்போதும் நடத்தியதில்லை.

தங்கள் முகாம்களிலேயே தீவிரவாதிகள் அழிக்கப்பட்டனர். இதுபோன்ற நடவடிக்கைகளை தீவிரவாதிகளும் அவர்களை காப்பவர்களும் எதிர்பார்க்கவில்ைல. இந்தியா ஒருமுறை சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தினால் அதே போன்ற தாக்குதலை தான் மீண்டும் நடத்தும் என அவர்கள் நினைத்தார்கள். எனவே, அவர்கள் எல்லைகளில் தான் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தார்கள். ஆனால், நாம் தற்போது விமானங்களில் சென்று தாக்குதல் நடத்தியுள்ளோம்.
விமான தாக்குதல் நடத்துவதற்கு முன் கடந்த பிப்ரவரி 24ம் தேதி இந்தியா அமைதியாக சூழ்நிலையை கண்காணித்து வந்தது. அதிகாலை 5 மணிக்கு மோடி எங்களை தாக்கிவிட்டார் என பாகிஸ்தான் கண்ணீர் வடிக்க தொடங்கியது. ஊழல்வாதிகள் ஒவ்வொருவரும் மோடியால் பிரச்னைகளுக்கு உள்ளாகின்றனர். இதனால், இந்த காவலாளி மீது குற்றம்சாட்ட அவர்களுக்குள் போட்டி நிலவுகிறது. இப்படி என் மீது குற்றம்சாட்டுவதன் மூலம் வாக்குகளை பெற்றுவிட துடிக்கிறார்கள்.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலின் போது நமது வீரர்கள் பதிலடி கொடுக்க தயாராக இருந்தார்கள் ஆனால், 2014ம் ஆண்டுக்கு முந்தைய ரிமோட் கன்ட்ரோல் அரசு நமது படைகளுக்கு அதற்கான அனுமதியை தரவில்லை. தற்போது, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள புதிய மின்நிலையங்கள் செயல்பட தொடங்கினால் உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்கள் பலனடையும். முந்தைய அரசுகள் மின்துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை. இதனால், முந்தைய அரசு ரூ.10க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வந்தது. நாங்கள் சூரியசக்தி மின்சாரத்தை யூனிட் ரூ.2 செலவில் உற்பத்தி செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

புதிதாக 11 டிடி சேனல்
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `பிரசார் பாரதி சார்பில் புதிதாக 11 தூர்தர்ஷன் சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், 5 வடகிழக்கு மாநிலங்களில் உள்ளன. இலவச டிஷ் மூலமாக இந்த சேவை கிடைக்கிறது’ என்று கூறியுள்ளார்.  மற்றொரு டிவிட்டர் பதிவில், ‘சட்டீஸ்கர், கோவா, அரியானா, இமாச்சலபிரதேசம், ஜார்க்கண்ட், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா, உத்தரகாண்ட் மாநிலங்களுக்கு இலவச டிடி டிஷ் ேசவை முதல்முறையாக கிடைக்கப் பெற்றதற்காக அந்த மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்’ என கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Narendra Modi ,speech ,Striking Strike , Right-arm camp, radicals, surgeon strike, prime minister Modi
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...