×

லாரி மீது பைக் மோதி தீவிபத்து உடல் கருகி மாணவன் சாவு : நண்பன் கண்முன் பரிதாபம்

பல்லாவரம்: கொடுங்கையூர் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (19). பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர், தினமும் கல்லூரிக்கு பைக்கில் தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலை வழியாக சென்று வருவது வழக்கம். அதன்படி, நேற்று கல்லூரி முடிந்ததும் தனது நண்பர் பெரம்பூரை சேர்ந்த பிரான்சிஸ் விக்டர் (19) என்பவரை உடன் அழைத்துக் கொண்டு ராஜ்குமார் கொடுங்கையூர் நோக்கி புறப்பட்டார். கோவூர் மேம்பாலம் அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், முன்னால் சென்ற சரக்கு லாரி மீது மோதியது.
இதில், பிரான்சிஸ் தூக்கி வீசப்பட்டு சிறு காயங்களுடன் தப்பினார். ஆனால் கீழே விழுந்த பைக்கில் ராஜ்குமாரின் கால் சிக்கியதால் வெளியே வர முடியாமல் தவித்தார்.

அப்போது, பைக்கில் இருந்து அதிகப்படியாக பெட்ரோல் வெளியேறியதால் இன்ஜின் சூட்டில் தீப்பிடித்தது. பைக்குடன் சிக்கிய ராஜ்குமார் தனது நண்பன் கண்முன்னே துடிதுடித்து பரிதாபமாக தீயில் உடல் கருகி பலியானார். மதுரவாயல் மற்றும் தாம்பரம் பகுதிகளில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். அதற்குள் பைக்குடன் ராஜ்குமார் தீயில் எரிந்து சாம்பலானார். அவரது சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த பிரான்சிஸ்சை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், இதுகுறித்து  வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்து ஏற்பட காரணமாக இருந்த சரக்கு லாரி ஓட்டுநர் செந்தில்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : deceased , Bike collided with lorry
× RELATED பாடி மேம்பாலத்தில் பைக்கில்...