சென்னை: பணிவரன்முறை செய்யப்பட்ட பணியாளர்களுக்கு குறைவாக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டால் துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கமிஷனர் கோயில் அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அறநிலையத்துறையில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வரும் 8,180 பணியாளர்களை பணி வரன்முறை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014ல் உத்தரவிட்டார். அதன்பேரில் தற்போது, 2,900 பணியாளர்கள் பணி வரன்முறை செய்து காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பணியாளர்களுக்கு ஊதிய விகிதம் குறைத்து நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, இந்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு சுற்றறிக்ைக ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், பணி வரன்முறை செய்யப்பட்ட கோயில் பணியாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் பணியிடத்திற்கு அரசாணையில் நிர்ணயம் செய்யப்பட்ட ஊதிய விகிதத்தை விட குறைந்த ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் அரசாணையில் குறிப்பிட்டுள்ள ஊதியத்தை நிர்ணயம் செய்வது தொடர்பாக முன்மொழிவுகளை மண்டல இணை ஆணையர்கள் தங்கள் சரகத்தில் உள்ள அனைத்து கோயில் செயல் அலுவலரிடம் பெற அறிவுறுத்தப்படுகிறது.
முன்மொழிவுகள் பெற்றப்பின் மண்டல தணிக்கை அலுவலரின் சரிபார்த்தலுக்கு உட்பட்டு பணியாளர்கள் பணிபுரியும் பணியிடத்திற்கு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஊதியத்தை திருத்தி நிர்ணயம் செய்திட அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. திருத்திய ஊதிய நிர்ணய உத்தரவு நாள் முதல் மட்டுமே திருத்திய ஊதிய விகிதத்தினை செயல்படுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. எக்காரணம் கொண்டும் முன்தேதியிட்டு பணப்பயன்கள் வழங்கக்கூடாது.
பணியாளர்களுக்கு திருத்திய நிர்ணயம் செய்யும் போது, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள பணியிடத்திற்கு ஏற்ப ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். கூடுதலாக ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டால் கூடுதல் தொகையினை கீழ்க்கண்ட விகித அடிப்படையில் பின்வருமாறு பணியாளர்கள் மற்றும் அலுவலர்களிடம் வசூல் செய்து திருக்கோயிலில் செலுத்தப்படும். திருக்கோயில் பணிப்பிரிவு உதவியாளர் 20சதவீதம், கண்காணிப்பாளர் 20 சதவீதம், மண்டல தணிக்கை அலுவலர் 15 சதவீதம், இணை ஆணையர் அலுவலக உதவியாளர் 20 சதவீதம், இணை ஆணையர் அலுவலக மேலாளர் 20 சதவீதம், இணை ஆணையர் (தொடர்பு) 5 சதவீதம். குறைவாக ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்களை பொறுப்பாக்கி கடமையை சரிவர செய்யாத காரணத்திற்காக உரிய துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். முதுநிலை திருக்கோயில் பணியாளர்களுக்கு தனியே உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
