×

கோயில்களின் வருமானத்தில் இருந்து அதிகாரிகள் வாகனம் வாங்க தடைகோரி வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் செலவில் அதிகாரிகள் வாகனம் வாங்கத் தடை கோரிய வழக்கில் தமிழக அரசின் கருத்தை தெரிவிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல் பி.ஜெகநாத் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில்  ஆம்புலன்ஸ், தீயணைப்பு உபகரணங்கள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கும் கோயில்களின் வருமானத்திலிருந்து செலவு செய்யலாம். ஆனால், தற்போது கோயில் அதிகாரிகளுக்கு கோயில்களின் வருமானத்திலிருந்து வாகனம் வாங்குகிறார்கள்.

கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 8.89 லட்சம் செலவில் மகேந்திரா பொலீரோ கார் வாங்க இந்து சமய அறநிலையத்துறை இணைகமிஷனர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
எனவே, தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின்கீழ் உள்ள கோயில்களின்  வருமானத்திலிருந்து அதிகாரிகள் வாகனங்களை வாங்கத் தடை விதிக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழக அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்குமாறு கூடுதல் அரசு பிளீடர் மனோகரனுக்கு உத்தரவிட்டு விசாரணையை 12ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Temples, income, government, hort
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100