×

அரசு பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும் அரிசி மூட்டைகளில் பெரும் கொள்ளை

* பற்றாக்குறையால் குழந்தைகளுக்கு உணவு வழங்குவது குறைப்பு
* சத்துணவு ஊழியர்கள் குற்றச்சாட்டு

சென்னை: அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின்கீழ் வரும் அரிசி மூட்டைகளில் பெரும் கொள்ளை நடைபெறுவதால் மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எத்தனை முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் சத்துணவு ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 43 ஆயிரத்து 47 பள்ளிகளில் சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த மையங்களின் மூலம் 55 லட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இதேபோல், சத்துணவு ஊழியர்கள் மூலம் குழந்தைகளுக்கு உணவு சமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், பள்ளிகள் மற்றும் சத்துணவு மையங்களுக்கு வரும் அரிசியில் பெரும் கொள்ளை நடப்பதாக சத்துணவு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக, 50 கிலோ அரிசி வரவேண்டிய மையங்களுக்கு வெறும் 35 முதல் 40 கிலோ அரிசி மட்டுமே வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் டெண்டர் எடுத்து பணிகளில் ஈடுபடும் நபர்கள் இந்த கொள்ளைகளில் ஈடுபடுவதால் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்குவதில் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து சத்துணவு பணியாளர்கள் கூறியதாவது: அங்கன்வாடி மையங்களில் ஒரு குழந்தைக்கு உப்பு 1.9 கிராம் எனவும், பருப்பு 1.5 கிராம், கொண்டகடலை, பாசிபயறு (வாரத்திற்கு ஒருநாள்) 20 கிராம், அரிசி 100 கிராம் எனவும், 6-10ம் வகுப்பு மாணவர்களுக்கு 150 கிராம் அரிசியும் என கணக்கிடப்பட்டு உணவு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது. உப்பு 100 குழந்தைகளுக்கு 190 கிராம் என கணக்கிட்டு தருகின்றனர்.

இது பெரும்பாலும் பத்தாமல் போய்விடுகிறது.50 கிலோ அரிசி மூடைகளில் 10 முதல் 15 கிலோ அரிசி இடைத்தரகர்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. இதுகுறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால், மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் பற்றாக்குறை ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு குறைவான அளவே உணவு வழங்கப்படுகிறது. இதுகுறித்து அரசு உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : burglary ,government schools , Government school, rice bundle, robbery
× RELATED பள்ளி வளாகங்களில் செயல்படும் கல்வி...