×

வடமாநிலங்களில் எம்.பி. சீட் இழப்புகளை ஈடுசெய்ய தென்மாநிலங்களில் `அறுவடை’ செய்ய பா.ஜ. திட்டம்

நெல்லை: உ.பி. உள்ளிட்ட வடமாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் பா.ஜ.வுக்கு ஏற்படும் எம்.பி. சீட் இழப்புகளை தென்மாநிலங்களில் ஈடு செய்ய அக்கட்சி முயற்சிகளை செய்து வருகிறது.நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வருகிற 11 அல்லது 12ம் தேதிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. குஜராத்தில் தொடர்ந்து 4வது முறையாக நரேந்திர மோடி முதல்வராக வெற்றி பெற்றதைப் போல் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ. கூட்டணியை வெற்றி பெற மோடியை 2வது முறையாக பிரதமராக்க வேண்டும் என்று அக்கட்சியின் அகில இந்திய தலைவர் அமித்ஷா காய்களை நகர்த்தி வருகிறார். உ.பி.யில் 2014 நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 85 இடங்களில் 73 இடங்களில் பா.ஜ. வெற்றி பெற்றது. ஆனால் இந்த தேர்தலில் எதிரும் புதிருமாக இருந்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதோடு பிரியங்காவை களத்தில் இறக்கியுள்ளது. மேலும் உ.பி.யில் ஆளும்கட்சியாக இருக்கும் பா.ஜ.வுக்கு மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உள்ளது. இதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தல் போல் 80 சதவீத இடங்களை உ.பி.யில் பெற முடியாது என்பதை பா.ஜ. உணர்ந்துள்ளது.இதுபோல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தெலங்கானாவில் ராஷ்ட்டிரிய சமிதியும், கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி அரசும் ஆட்சியில் அமர்ந்துள்ளன.

உ.பி.,  மேற்கு வங்கம் மற்றும் சமீபத்திய சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற மாநிலங்களில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.வுக்கு அதிக இடங்கள் கிடைக்காது என்பதால் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, ஆந்திரா மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணியால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியால் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிக எம்.பி. சீட்களில் வெற்றி பெற பா.ஜ. திட்டமிட்டுள்ளது.தென்மாநிலங்களில் மொத்தம் 130 எம்.பி. சீட்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் 5 இடங்கள் மட்டுமே பா.ஜ.வுக்கு ஒதுக்கினாலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் நம்பிக்ைக தெரிவித்துள்ளனர். இதுபோல் தெலங்கானாவிலும், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தை எதிர்த்து பா.ஜ. நடத்திய போராட்டத்தால் கேரளாவிலும் பா.ஜ. கணக்கை துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு எதிராக அதிருப்தி அலை வீசுவதால் அங்கும் பா.ஜ.வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என்று கட்சியினர் தெரிவித்தனர். அங்கு காங்கிரசும், தெலுங்குதேசமும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், பொருந்தா கூட்டணியாக அதைக் கருதி மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் வடமாநிலங்களில் ஏற்படும் சீட் இழப்பை எப்படியாவது தென்மாநிலங்களிலும் ஈடுகட்டி விடலாம் என்று கருதி அதற்கேற்ப பா.ஜ. காய்களை நகர்த்தி வருகிறது.

பா.ஜ. வாங்கிய ஓட்டு சதவீதம்: தமிழ்நாட்டில் 1991 தேர்தலில் 15 நாடாளுமன்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட பா.ஜ. 1.65 சதவீத ஓட்டுக்களையும், 1996 தேர்தலில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட போது 2.93 சதவீத ஓட்டுக்களையும், 1998 தேர்தலில் அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிட்டு 3 இடங்கைள வென்ற நிலையில் 6.86 சதவீத ஓட்டுக்களை பெற்றது.1999ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்று 7.14 ஓட்டு சதவீதத்தையும், 2004ல் அதிமுக கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்டு எதிலும் வெற்றி பெறாமல் 5.07 சதவீதத்தையும், 2009ல் சிறிய கட்சிகளை கூட்டணி சேர்த்து 18 தொகுதிகளில் போட்டியிட்டு 2.3 சதவீதத்தையும், 2014 தேர்தலில் 9 தொகுதிகளில் போட்டியிட்டு 5.48 சதவீதம் ஓட்டுக்கள் பெற்றுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MPs ,states ,Northern States ,BJP , Northern States, MP , Southern states, `harvesting, BJP
× RELATED வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...