×

உஷ்ஷ்ஷ்.....அப்பா.....இப்பவே கண்ண கட்டுதே...திருச்சியில் கிளம்புது தினம் ஒரு புரளி

திருச்சி: மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து தினம் ஒரு புரளி கிளம்புவதால், அனைத்து கட்சி தொண்டர்களும் எதை நம்புவது என தெரியாமல் குழப்பமான மனநிலையில் உள்ளனர்.மக்களவை தேர்தல் பரபரப்பு தொடங்கியதில் இருந்து திருச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அவ்வப்போது ஏதாவது ஒரு புரளி கிளம்பிக்கொண்டே இருக்கிறது. 4 மாதங்களுக்கு முன் திமுக கூட்டணியில் திருச்சி காங்கிரசுக்கு ஒதுக்கப்படும். திருநாவுக்கரசர் தான் போட்டியிடப்போகிறார் என்ற பேச்சு உலா வந்தது. இதைக்கேட்டு திருநாவுக்கரசரின் ஆதரவாளர்கள் உற்சாகமாக வலம் வந்தனர். ஆனால் இந்த பேச்சு கடந்த மாதம் மறைந்து போனது. காரணம் மதிமுக பொது செயலாளர் வைகோ, இந்த முறை திருச்சி தொகுதியை குறி வைத்துள்ளார். அங்கு தான் களமிறங்க போகிறார் என்ற செய்தி றெக்கை கட்டி பறந்தது.

இது உண்மை தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 1 மாதமாக வைகோ திருச்சியில் முகாமிட்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இதனால் திருச்சியில் திருநாவுக்கரசரா, வைகோவா என்ற பட்டிமன்றம் இரு கட்சி தொண்டர்கள் மட்டுமின்றி, அனைத்து கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.இதோடு இன்னொரு தகவலும் சேர்ந்து, கட்சி தொண்டர்களின் பிபியை எகிற வைத்தது. அதாவது அதிமுக கூட்டணியில் திருச்சி பாஜகவுக்கு ஒதுக்கப்பட இருக்கிறது. வைகோவை எதிர்த்து தமிழிசை தான் போட்டி போடப்போகிறார் என்ற தகவல் தான் அது. இதையெல்லாம் நம்புவதா, வேண்டாமா என்று காமெடி  நடிகர் வடிவேலுவின் டயலாக் போல் தொண்டர்கள் பேசிக்கொண்டனர்.இந்நிலையில் மேலே சொன்ன அத்தனை தகவல்களையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு கடந்த 3 நாட்களாக இன்னொரு தகவல் ஜெட் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அதிமுக கூட்டணியில் திருச்சி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட உள்ளது. சுதீஷ் தான் வேட்பாளர் என்கிறது அந்த தகவல். இதைக்கேட்டு அதிமுக தரப்பே ஷாக்காகி நிற்கிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் திருச்சி தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படாது. திமுகவே மீண்டும் களமிறங்கும். முக்கிய விஐபிதான் வேட்பாளர் என்று லேட்டஸ்டாக ஒரு தகவல் கிர்ரடித்துக்கொண்டிருக்கிறது. யப்பா.... தாங்க முடியலடா சாமி......இந்த தகவல்களை எல்லாம் கேட்டுக்கேட்டு மண்டைக்குள்ள குருவிச்சத்தமா கேக்குதுப்பா. சட்டுபுட்டுனு பேச்சுவார்த்தயை முடிச்சு, அந்தந்த கட்சிகளுக்கு தொகுதிகளை அறிவிங்கப்பா என்று சம்மந்தப்பட்ட கட்சிகளின் தொண்டர்கள் மட்டுமின்றி, அனைத்து கட்சி தொண்டர்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : daddy , Ushash, Father, Trichy, Day
× RELATED மலையாளப் படத்துக்கு இசை அமைக்கிறார் அனிருத்