×

ஆந்திராவில் பிளாக்மெயில் அரசியல்: ஜெகன் நடத்தும் நாடக பின்னணியில் பாஜக, கே.சிஆர்...முதல்வர் சந்திரபாபு நாயுடு சாடல்

திருமலை: ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:  பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தெலுங்கு தேசம் கட்சியே இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது. அண்ணன், தங்கை பந்தத்தை போன்றது தெலுங்கு தேசம் கட்சியுடனான பெண்களின் பந்தம். எங்கள் ஆட்சியில் பெண்களுக்கான மரியாதை கவுரவத்தை உயர்த்தி உள்ளோம். ஒவ்வொரு மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கும் தற்போது ரூ.3500 வங்கியில் செலுத்தப்பட்டுள்ளது. எதிர்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு பெண்களே உரிய பதிலடி வழங்கவேண்டும். எனவே இதுகுறித்து மூன்று நாட்கள் அனைத்து இடங்களிலும் பேரணி மற்றும் கூட்டம் நடத்த வேண்டும்.

திருடர்களை நம்ப மாட்டோம் என பெண்களிடம் உறுதிமொழி எடுக்க வேண்டும். குப்பம் தொகுதிக்கு கிருஷ்ணா தண்ணீர் கொண்டு சென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆந்திர மாநிலத்தின் கடைக்கோடியில் உள்ள குப்பத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றிருப்பது ஒரு சரித்திரமாகும்.10 நாட்களில் மாநிலத்தில் ரூ.45 ஆயிரம் கோடி முதலீட்டிற்கு மாநில அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்து வரும் நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி அந்த வளர்ச்சியை தடுக்கும் விதமாக ஈடுபட்டு வருகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி செய்து வரும் அரசியல் நாடகத்திற்கு பாஜவும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் பின்னால் இருந்து ஊக்குவித்து வருகிறது. தெலுங்கு தேசம் கட்சியின் தகவல்களை திருடியது மற்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களை நீக்கம் செய்தது இதில் ஒரு பாகம்.

ஆந்திர மாநிலத்திற்கு எந்தவொரு முதலீட்டாளர்களும் வரக்கூடாது என்று பாஜ, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கு தடையாக இருக்கவேண்டும் என்று இந்த மூன்று கட்சிகளும் செயல்பட்டு வருகிறது. தெலுங்கு தேசம் கட்சியின் தகவல்களை திருடியது குறித்து விசாரணை செய்ய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு அதிக அளவில் பணம் சேர்ந்துள்ளது. அதற்காகவே ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு அம்மாநில முதல்வர் பின்னால் இருந்து நிதி உதவி அளித்து வருகிறார். தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களை பாஜ மத்திய வருமானவரித்துறை, பொருளாதார குற்றப்பிரிவு போன்ற துறைகள் மூலமாக மிரட்டி வருகிறது. இதுபோன்று பிளாக் மெயில் அரசியலுக்கு பொதுமக்களே உரிய பாடம் புகட்டுவார்கள்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு தலைவர் சந்திரசேகரராவ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் செயல் தலைவர் கே.டி.ராமாராவ். ஜெகன்மோகன் ரெட்டியை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி டம்மியாக மாற்றியுள்ளது. எனவே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் உறவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Andhra Pradesh ,theater ,Jagan ,Chandrababu Naidu ,BJP ,KCR , Andhra Pradesh, Blackmail, Politics, Jagan, BJP, KCR, Chief Minister Chandrababu Naidu
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்