×

குளத்தூர் பகுதி உப்பளங்களில் 5 மாதங்களுக்கு பின்னர் உப்பு வாரும் பணி துவக்கம்

குளத்தூர் : தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள வேப்பலோடை, கல்மேடு, சக்கம்மாள்புரம், தருவைகுளம், வைப்பார், பெரியசாமிபுரம், வேம்பார் பகுதியில் உள்ள உப்பளங்களில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு உப்பள பாத்திகளில் உப்பு வாருதல் உள்ளிட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. உப்பள பணிகள் இல்லாததால் பெரும்பாலான தொழிலாளர்கள் விவசாய கூலி வேலைகளுக்கு சென்றனர். ஆனால்  பருவமழை பொய்த்ததால் விவசாய கூலி வேலைகளும் அதிகநாள் அமையவில்லை.

 உப்பளங்களில் பணிகள் துவங்கிய பின்னரே வேலை என காத்திருந்தனர். ஆண்டுதோறும் தை மாதம் பாதியிலேயே துவங்கும் உப்பள பணிகள் இந்த ஆண்டு சற்று தாமதமானதால் பெரும்பாலான உப்பளத் தொழிலாளர்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள உப்பளங்களில் பராமரிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உப்பு பாத்திகளில் தண்ணீர் விட்டு உப்பு வாருதல் பணி மீண்டும் துவங்கியுள்ளது. இதனால் அனைத்து தொழிலாளர்களும் உப்பள பணிகளுக்கு மீண்டும் செல்லத் துவங்கியுள்ளனர்.

 இதுகுறித்து உப்பளத் தொழிலாளர்கள் கூறியதாவது: கடந்த வருடம் பருவமழை முன்கூட்டியே துவங்கியதால் உப்பள பாத்திகளில் மழை தண்ணீர் தேங்கி உப்புவாருதல் தடைபட்டது. இதனால் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ஒரு மாதம் முன்கூட்டியே வேலை இல்லாமல் போனது. மேலும் விவசாய கூலி வேலைக்கு செல்லலாம் என்றால் பருவமழையும் பாதியிலேயே கைவிட்டது. இதனால் உப்பள வேலைகளும் இல்லை, விவசாய வேலையும் இல்லாமல் கடந்த 3 மாதங்களாக வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல் வட்டிக்கு பணம் வாங்கி செலவு செய்ய வேண்டிய நிலையாகிவிட்டது.

இந்த வருடம் உப்பள பணிகள் விரைவாக துவங்கி விடும் என எதிர்பார்த்த நிலையில் மந்தமாகவே பணி துவங்கியுள்ளது. தற்போது உப்பளங்களில் பாத்தி அமைத்தல், உப்பு வாருதல் போன்ற பணிகள் துவங்கியதால் அனைத்து உப்பள தொழிலாளர்களும் மீண்டும் வேலைக்கு செல்லத் துவங்கியுள்ளனர்’ என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : saline area , salt preparation,saline area,kulathur, thoothukudi
× RELATED நடுரோட்டில் டான்ஸ் ஆடி பஸ்சுக்கு கிக் கொடுத்த போதை ஆசாமி கால் உடைந்தது